This Article is From Dec 17, 2019

ஜாமியா வன்முறை 10 பேர் கைது: கைது செய்யப்பட்டவர்கள் மாணவர்கள் இல்லை என தகவல்!

இதுவரை எந்த ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என டெல்லி போலீசார் கூறுகின்றனர்

ஜாமியா வன்முறை 10 பேர் கைது: கைது செய்யப்பட்டவர்கள் மாணவர்கள் இல்லை என தகவல்!

போலீசார் சுமார் 100 மாணவர்களை கைது செய்தனர்.

New Delhi:

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக குற்றப்பின்னணி கொண்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவர்கள் மற்றும் போலீசார் இடையே பெரும் வன்முறை ஏற்பட்டது. 

இதில், பல்வேறு மாணவர்களும் போலீசாரும் பலத்த காயமடைந்தனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக போலீசார் தற்போது 10 பேரை கைது செய்துள்ளனர்.

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஜாமிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடைபெற்றபோது, அனுமதி அளிக்கப்படாத பகுதியில் பேரணியாக செல்ல வேண்டாம் என்று போலீசார் போராட்டக்காரர்களை கேட்டுக் கொண்டனர். 

எனினும், போராட்டக்காரர்கள் பின் வாங்காமல் தங்கள் பேரணியை தொடர்ந்தனர். இதையடுத்து, அவர்களை பின்நோக்கி செல்ல வைக்க போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்த துவங்கியுள்ளனர். இதையடுத்து, அந்த பகுதியே கலவர நிலையானது. ஏற்பட்ட இந்த பெரும் வன்முறையில் பேருந்துகளை தீயிட்டு கொளுத்தியதுடன் கல் வீச்சு சம்பவமும் நிகழ்ந்தது. இதையடுத்து, கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர். 

பின்னர் பல்கலைக் கழகத்தை சுற்றி வளைத்த போலீசார் சுமார் 100 மாணவர்களை கைது செய்தனர். பின்னர் அதிகாலை 3.30 மணி அளவில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டார்கள். 

இதுதொடர்பாக என்டிடிவிக்கு ஜாமியா பல்கலைக்கழக துணைவேந்தர் நஜ்மா அக்தா கூறும்போது, மாணவர்களின் அணிவகுப்பில் இணைந்த உள்ளூர்வாசிகளே வன்முறைக்கு காரணம் என்று கூறியுள்ளார். பல்கலைக்கழக வளாகம் இரண்டாகப் பிரியும் பிரதான சாலையிலிருந்து அவர்கள் மாணவர் போராட்டத்தில் இணைந்திருக்கலாம் என்று அவர் கூறினார்.

இதனிடையே, டெல்லி காவல்துறையினர் ஜாமியா வளாகத்திற்குள் வலுக்கட்டாயமாக ஊடுருவினர் என்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள காவல்துறையினர், "நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கே அவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளனர். 

.