This Article is From Apr 15, 2019

யோகி ஆதித்யநாத், மாயாவதி பிரசாரம் செய்ய தடை! - தேர்தல் ஆணையம் அதிரடி

தேர்தல் விதிகளை மீறிய தலைவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், மாயாவதி மற்றும் யோகி ஆதித்யநாத் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத், மாயாவதி பிரசாரம் செய்ய தடை! - தேர்தல் ஆணையம் அதிரடி

யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதிக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை

ஹைலைட்ஸ்

  • யோகி ஆதித்யநாத் அடுத்த 3 நாட்களுக்கு பிரசாரம் செய்ய தடை விதிப்பு.
  • மாயாவதி அடுத்த 2 நாட்களுக்கு பிரசாரம் செய்ய தடை விதிப்பு
  • இருவரும் தேர்தல் விதிகளை மீறியதாக கூறப்படுகிறது.
New Delhi:

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அடுத்த 3 நாட்களுக்கும், மாயாவதி அடுத்த 2 நாட்களும் பிரசாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் தலைவர்கள் தவறு செய்யாமல் இருக்க தேர்தல் ஆணையம், அதன் அதிகாரங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியது.

தேர்தல் பிரசாரத்தின் போது, ஜாதி மற்றும் மதத்தை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜாதி மற்றும் மத ரீதியாக பேசிய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்

இதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஆணையில், யோகி ஆதித்யநாத் எந்த ஒரு பொதுக்கூட்டங்களில் பேசுவது மட்டுமின்றி செய்தியாளர்களை சந்தித்தல் ஆகியவற்றிற்கும் அடுத்த 72 மணி நேரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மாயாவதிக்கு அடுத்த 48 மணி நேரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது நாளை முதல் அமலாகிறது.

ஏற்கனவே யோகி ஆதித்யநாத், பாதுகாப்பு படை வீரர்களை, பிரதமர் மோடியின் படை என குறிப்பிட்டதற்கு எதிர்கட்சிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதேபோல், காஸியாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், காங்கிரஸார் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி வழங்குகின்றனர். ஆனால், பிரதமர் மோடி, அவர்களுக்கு தோட்டாக்கள் குண்டுகள் மட்டுமே வழங்குவார் என்று கூறியிருந்தார்.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 6 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

.