This Article is From Sep 27, 2018

செயலிழந்த அடிப்படை கருவிகள்… சாதுர்யமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

நியூயார்க் விமான நிலையத்தில் தரையிறங்க ஏர் இந்தியா 101 விமானம் தயாரான போது, விமானத்தின் உள்ள மூன்றில் 2 ரேடியோ ஆல்டிமீட்டர் செயலிழந்தன

4 பேர் கொண்ட காக்பிட் குழு, விமானத்தை நிர்வகித்தது

ஹைலைட்ஸ்

  • ஏர் இந்தியா 101 விமானத்தில் பல கருவிகள் செயலிழந்தன
  • டெல்லியிலிருந்து நியூயார்கிற்கு சென்றது விமானம்
  • இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா விசாரித்து வருகிறது
New Delhi:

கடந்த 11 ஆம் தேதி, டெல்லியில் இருந்து நியூயார்க் சென்ற ஏர் இந்தியா 101 விமானத்தின் அடிப்படை கருவிகள் செயலிழந்த நிலையிலும், விமானத்தை அதன் காக்பிட் குழு சாதுர்யமாக தரையிறக்கி, ஏற்பட இருந்த பெரும் ஆபத்தைத் தவிர்த்துள்ளது. அந்தக் குழுவிடம் நாம் பேசியபோது பல திக் திக் தகவல்கள் தெரியவந்தன.

நியூயார்க் விமான நிலையத்தில் தரையிறங்க ஏர் இந்தியா 101 விமானம் தயாரான போது, விமானத்தின் உள்ள மூன்றில் 2 ரேடியோ ஆல்டிமீட்டர் செயலிழந்தன, தரையிறங்கும் அமைப்பில் பின்னடைவு ஏற்பட்டது, தானாக தரையிறங்கும் அமைப்பில் கோளாறு என பலவிதத்தில் பின்னடைவு ஏற்பட்டன. மேலும் விமான நிலையத்துக்கு அருகில் வானிலையும் மிகவும் மோசமானதாக இருந்தது. அதே நேரத்தில் எரிபொருளும் தீர்ந்து போகும் தறுவாயில் இருந்தது. இப்படி எல்லா பிரச்னைகளையும் சமாளித்து, விமானத்தில் இருந்த பயணிகளுக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படாமல் காப்பாற்றி இருக்கிறது ஏர் இந்தியா 101 விமானத்தின் காக்பிட் குழு.

நடந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா போயிங் 777 விமானத்தின் சீனியர் கமாண்டர், கேப்டன் ரஸ்டாம் பாலியா, ‘நாங்கள் சரியான நேரத்தில் மட்டும் விமானத்தை தரையிறக்கச் செய்திருக்கவில்லை என்றால், என்ன நடந்திருக்கும் என்றே யூகிக்க முடியவில்லை. ஏனென்றால், விமானத்திலும் எரிபொருள் மிகவும் குறைவாக இருந்தது’ என்று கூறியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து விமானத்துக்கான இரண்டாவது காமண்டர், கேப்டன் சுஷாந்த் சிங், ‘நாங்கள் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கு உதவிகரமாக இருந்திருக்க வேண்டிய எந்தச் சாதணமும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கவில்லை. விமானத்திலிருந்த பல்வேறு கருவிகள் தொடர்ந்து செயலிழந்து வந்ததால், சீக்கிரமாக ஒரு முடிவை நாங்கள் எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். 15 மணி நேரம் தொடர்ந்து நாங்கள் விமானத்தில் பயணம் செய்தோம். அதே நேரத்தில் நியூயார்க் விமான நிலையத்திலும் வானிலை சரியில்லை. நிறைய விஷயங்களை கருத்தில் கொண்டு தான் அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி செல்ல வேண்டியிருந்தது’ என்று பரபரப்பாக விளக்கினார்.

m9bfhegg

கேப்டன் பாலியா, எப்படி தரையிறங்குவது என்று முடிவெடுத்துவிட்டார். விமானத்தில் போதிய எரிபொருள் இல்லாததால், பக்கத்து விமான நிலையங்களுக்குச் செல்லக்கூடிய நிலை இல்லை. என்ன ஆனாலும் நியூயார்க் விமான நிலையத்தில் தரையிறங்க கேப்டன் பாலியா முடிவெடுத்தார். 

‘மோசமான வானிலை காரணமாக, விமான நிலையித்தின் ரன்-வே எங்களுக்கு தென்படவில்லை. ஆனால், வெறும் 400 அடிகள் உயரத்தில் இருந்தபோது ரன்-வேயை நான் பார்த்துவிட்டேன். ஆனால், விமானம் செல்லும் வேகத்துக்கு 1.5 வினாடிகளில் ரன்-வேவுக்குச் சென்றுவிடுவோம் என்பது தெரிந்தது’ என்று இறுதிக்கட்டத்தைக் குறித்து பகிர்ந்தார் சுஷாந்த் சிங்.

ஒரு வழியாக கேப்டன் பாலியாவின் தலைமையில், விமானக் குழு சாதுர்யமாக எந்த வித பிரச்னையுமின்றி விமானத்தைத் தரையிறக்கியது. 

விமானத்தின் அடிப்படை கருவிகளின் தொடர் செயலிழப்புக்கு என்ன காரணம் என்று ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை செய்து வருகிறது. மிகவும் கஷ்டமான ஒரு சம்பவத்தை மிக நேர்த்தியாக கையாண்ட காக்பிட் குழுவை பலரும் பாராட்டியுள்ளனர்.

.