This Article is From Jul 19, 2018

11 வயது சிறுமி பலாத்கார வழக்கு: முதல்வர் முக்கிய கருத்து!

இதையொட்டி பேசியுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார்

11 வயது சிறுமி பலாத்கார வழக்கு: முதல்வர் முக்கிய கருத்து!
Coimbatore:

சென்னையில் இருக்கும் அயனாவரத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியை, 7 மாதங்கள் பாலியல் பலாத்காரம் செய்த புகாரில், சிறுமி வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த மற்றும் அங்கு வேலை பார்த்து வந்த 17 பேரை கைது செய்துள்ளது காவல் துறை. இந்நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பேசியுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் மகளிர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட 17  பேரும் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 17 பேரையும் ஜூலை 31 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்தையடுத்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து, ‘குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் சார்பில் சங்கத்தைச் சேர்ந்த எந்த வழக்கறிஞரும் ஆஜராகமாட்டோம்’ என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இந்த வழக்கைப் பொறுத்தவரை 66 வயதான லிஃப்ட் ஆபரேட்டர் தான், முதல் முறையாக சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ளார். அவர் தான், இதில் மற்றவர்களை ஈடுபடுத்தியுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல், சிறுமியை அடுக்குமாடி கட்டடத்தின் பல்வேறு இடங்களில் வைத்து 17 பேரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். அதை, வீடியோவாகவும் எடுத்து சிறுமியை மிரட்டியுள்ளனர். 

இதனால் பயந்த சிறுமி வெகு நாட்களுக்கு இது குறித்து யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல், சிறுமி அவரின் சகோதரியிடம் இந்த விஷயம் குறித்துக் கூற, அவர் தன் அம்மாவிடம் சொல்லியுள்ளார். பின்னர் தான், போலீஸில் புகார் அளிக்கப்பட்டு மொத்த சம்பவம் குறித்தும் வெளியே தெரியவந்தது. 

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. ஆனால், அரசு தரப்பிலிருந்து குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்துள்ளார். 
 

.