This Article is From Mar 01, 2019

பாகிஸ்தான், போர் விமானி அபினந்தனை விடுவிப்பதற்கான பின்னணி என்ன..?

Abhinandan Varthaman: இந்தியாவின் மிகவும் நெருங்கிய கூட்டாளியான ஐக்கிய அரபு அமீரகமும், பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்திருப்பதாக தெரிகிறது. 

பாகிஸ்தான், போர் விமானி அபினந்தனை விடுவிப்பதற்கான பின்னணி என்ன..?

இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சுமார் 25 நிமிடம் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

New Delhi:

பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபினந்தன் வர்தமனை (Abhinandan Varthaman) இன்று விடுவிப்பதாக அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். அமைதியை வலியுறுத்தும் நோக்கில் இந்த விடுவிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக பாகிஸ்தான் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. ஆனால் இது வெறுமனே பாகிஸ்தானின் நல்லிணக்க நடவடிக்கையாக மட்டும் பார்க்க முடியாது. சர்வதேச நாடுகள், பாகிஸ்தான் மீது கொடுத்த அழுத்தமும், அந்நாட்டின் முடிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு, இந்த விவகாரத்தில் அதிக அழுத்தம் கொடுத்துள்ளன. இது குறித்து இந்திய அரசு தரப்பிடமிருந்து எந்த வித அதிகாரபூர்வ தகவலும் கொடுக்கப்படவில்லை. 

அதே நேரத்தில் பாகிஸ்தானின் இந்த முடிவில், அமெரிக்காவின் பங்கு அதிகம் எனப்படுகிறது. குறிப்பாக நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் எனக்கு சொல்லிக் கொள்ளும்படியான நற்செய்தி வந்துள்ளது' என்று பகிரங்கமாக செய்தியாளர்கள் முன் அறிவித்தது இதன் வெளிப்பாடே எனப்படுகிறது. 

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்-ஐ சந்திக்கச் சென்ற அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘இந்தியா - பாகிஸ்தான் இடையில் நிலவி வரும் பதற்ற சூழலைத் தணிக்க நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். இந்நிலையில் எங்களுக்கு சொல்லிக் கொள்ளும்படியான நல்ல செய்தி வந்துள்ளது. சீக்கிரமே இரு நாட்டுப் பிரச்னை ஒரு சுமூக முடிவுக்கு வரும் என நம்புகிறேன். பல காலமாக இரு நாட்டுக்கும் இடையில் பிரச்னை நடந்து வருவது வருத்தமளிக்கிறது' என்றார். 

இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சுமார் 25 நிமிடம் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்தியாவின் மிகவும் நெருங்கிய கூட்டாளியான ஐக்கிய அரபு அமீரகமும், பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்திருப்பதாக தெரிகிறது. 

அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியா - பாகிஸ்தான் பிரதமர்களுடன் தொலைப்பேசியில் பேசியுள்ளேன். இரு நாட்டுப் பிரச்னையையும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளேன்' என்று பதிவிட்டுள்ளார். 

அபுதாபியில் நடக்கும் பல நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திக்கும் நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்ள உள்ளார். மார்ச் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு, இந்தியாவுக்கு முதன்முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில், கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தான் தரப்புக்குத்தான் அமீரகம் ஆதரவு தெரிவித்து வந்தது. இந்நிலையில், இந்தியாவுடன் நெருங்கிய நட்புடன் அந்நாடு பழகி வருவது கவனிக்கத்தக்கது. ஐக்கிய அரபு அமீரகம், அமைச்சர் சுஷ்மாவுக்கு அழைப்பு விடுத்ததில், பாகிஸ்தான் கடுப்பில் இருக்கிறது. இந்திய தரப்பு வந்தால் தாங்கள் வரமாட்டோம் என்றும் பாகிஸ்தான், அமீரகத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதேபோல சவுதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் அடேல் அல் ஜூபேர், ‘பாகிஸ்தானுக்கு பட்டத்து இளவரசர் எம்.பி.எஸ் இடமிருந்து ஒரு முக்கிய தகவலை எடுத்துச் செல்கிறேன்' என்று கூறியுள்ளார். 

மேலும் இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளும் பாகிஸ்தான் தரப்புக்கு இந்த விவகாரத்தில் அதிக அழுத்தம் கொடுத்துள்ளன. 

இப்படிப்பட்ட சூழலால் விங் கமாண்டர் அபினந்தனை, பாகிஸ்தான் விடுவித்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஜெனீவா ஒப்பந்தத்தை மதித்து, அபினந்தனை பாகிஸ்தான் எப்படியும் விடுத்திருக்கும் என்றாலும், உலக நாடுகளின் அழுத்தத்தால் அது உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

 

மேலும் படிக்கடெல்லிக்குப் புறப்பட்ட அபினந்தன் பெற்றோர்களுக்கு விமானத்தில் உற்சாக வரவேற்பு! 

.