This Article is From May 02, 2019

‘ஓ.பி.எஸ் பாஜக-வில் இணைகிறாரா, ஆதாரம் என்ன..?’- கேள்விக்கு தகித்த தங்க தமிழ்ச்செல்வன்

கடந்த ஒரு வாரமாக தமிழக அரசியலில் பரபரக்கப்படும் விஷயம், ‘ஓ.பன்னீர்செல்வம் பாஜக-வில் ஐக்கியமாக உள்ளார்’ என்ற தகவல்தான்

‘ஓ.பி.எஸ் பாஜக-வில் இணைகிறாரா, ஆதாரம் என்ன..?’- கேள்விக்கு தகித்த தங்க தமிழ்ச்செல்வன்

கடந்த வாரம் வாரணாசிக்குச் சென்ற துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை குடும்பத்தோடு சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

கடந்த ஒரு வாரமாக தமிழக அரசியலில் பரபரக்கப்படும் விஷயம், ‘ஓ.பன்னீர்செல்வம் பாஜக-வில் ஐக்கியமாக உள்ளார்' என்ற தகவல்தான். கடந்த வாரம் வாரணாசிக்குச் சென்ற துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை குடும்பத்தோடு சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஓ.பி.எஸ்-ஸின் இந்த பயணம் குறித்து பலரும் கேள்வியெழுப்பி வந்த நிலையில் அமமுக-வைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன், ‘பன்னீர்செல்வம் பாஜக-வில் இணைவது உறுதி' என நேரடியாக அவரை விமர்சித்தார். 

இது குறித்து நேற்று நான்கு பக்க அறிக்கை வெளியிட்டார் பன்னீர்செல்வம், ‘என் உயிர் போகும் நாளில் அதிமுகவின் கொடி போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக, லட்சியமாக கொண்டு வாழும் இந்த எளியவனை கட்சி மாறப்போகிறேன், வேறு கட்சிக்கு போகப்போகிறேன் என்றெல்லாம் வடிகட்டிய பொய்யை வதந்திகளாக்கி அதனை இந்திய விடுதலைக்கு குரல் கொடுத்த ஊடகங்கள் கூட நடுநிலை என்பதை மறந்து யாருக்கோ வால்பிடித்து புரளியால் குறளி வித்தை செய்வதை நினைத்து மிகுந்த வேதனை அடைகிறேன்.

என் மீது பரப்பப்படும் அவதூறுகளை, அடுக்காத பொய் குற்றச்சாட்டுகளை கட்சி தொண்டனும் சரி, என் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் தமிழக மக்களும் செவி கொடுத்து ஏற்க மாட்டார்கள் என்ற எனது ஆழமான நம்பிக்கையையும் இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று அறிக்கை வெளியிட்டு விளக்கம் கூறினார் ஓ.பி.எஸ்.

மேலும் தங்க தமிழ்ச்செல்வன் கருத்துக்கு, ‘நான் பாஜகவில் இணையவுள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறுவது முட்டாள்தனமான கருத்து' என கொதித்தார். 

இந்நிலையில், இன்று தங்க தமிழ்ச்செல்வனிடம், ‘ஓபிஎஸ், பாஜக-வில் இணைகிறார் என்று நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் ஏதும் உள்ளதா?' என்ற கேள்விக்கு, ‘ஆடிட்டர் குருமூர்த்தி சொல்லித்தான் தர்ம யுத்தத்தை ஓபிஎஸ் ஆரம்பித்தார். அமித்ஷா சொல்லித்தான் அதிமுக-வில் அவர் மீண்டும் இணைந்தார். மோடி சொல்லித்தான் துணை முதல்வர் பதவியை வாங்கிக் கொண்டார். இவர்கள் எல்லாம் யார். இவர்களுக்கும் அதிமுக-வுக்கும் என்ன தொடர்பு.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள். தேர்தல் முடிவு வந்த பின்னர், ஒபிஎஸ் குடும்பத்தோடு பாஜக-வில் இணைகிறாரா இல்லையா என்பதை பாருங்கள்' என்று கொந்தளித்தார். 

.