This Article is From May 06, 2020

‘அதிக அமெரிக்க உயிர்கள் பறிபோகும்!’- டிரம்ப்; மாஸ்க் அணியாமல் கொரோனா அச்சுறுத்தலையும் புறந்தள்ளினார்

Donald Trump: டிரம்ப், அரிசோனா மாகாணத்தில் உள்ள ஃபீனிக்ஸில் இருக்கும் ஹனிவெல் மாஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையைப் பார்வையிட்டார். 

‘அதிக அமெரிக்க உயிர்கள் பறிபோகும்!’- டிரம்ப்; மாஸ்க் அணியாமல் கொரோனா அச்சுறுத்தலையும் புறந்தள்ளினார்

கொரோனா பரவல் உலகம் முழுக்க பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையிலும், செய்தியாளர்களை சந்திக்கும்போதும்...

ஹைலைட்ஸ்

  • உலகிலேயே அமெரிக்காதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது
  • அமெரிக்கா, கொரோனா வைரஸுக்கு சீனாவை குற்றம் சாட்டி வருகிறது
  • உலகளவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளும் அமெரிக்காவில்தான் ஏற்பட்டுள்ளது
Phoenix:

கோவிட்-19 என சொல்லப்படும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பொது வெளியில் இருக்கும் போது மாஸ்க் அல்லது முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்களால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காதான் உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நாட்டில் உள்ள மாஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்றுள்ளார். அப்போது அவர், “தற்போது நாடு முழுவதும் பரவலான ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளன. அவை தளர்த்தப்படும்போது நிறைய உயிரிழப்புகள் நிகழ வாய்ப்புள்ளது,” என்று தெரிவித்தார். அவர் மாஸ்க் அணியவும் மறுத்துவிட்டார். 

டிரம்ப் மேலும், “நாட்டின் பொருளாதாரத்தை உயிர்ப்பிக்க தளர்வுகள் நீக்கப்படும்போது உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. கட்டுப்பாடுகள் நீக்கப்படும்போது நீங்கள் வீட்டிலோ, அப்பார்ட்மென்டிலோ இருக்க மாட்டீர்கள். சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் நாம் அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் தழைக்கச் செய்ய வேண்டும்,” என்று கூறியுள்ளார். 

டிரம்ப், அரிசோனா மாகாணத்தில் உள்ள ஃபீனிக்ஸில் இருக்கும் ஹனிவெல் மாஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையைப் பார்வையிட்டார். 

ஹனிவெல் தொழிற்சாலை, பாதுகாப்பு கருதி, ஆலைக்குள் இருக்கும் அனைத்து நேரங்களிலும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்று பாதுகாப்பு விதிமுறை வகுத்துள்ளது. ஆனால், அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட டிரம்ப், மாஸ்க் போடாமலேயே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொரோனா பரவல் உலகம் முழுக்க பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையிலும், செய்தியாளர்களை சந்திக்கும்போதும், பொது இடங்களில் வலம்வரும்போதும் டிரம்ப், மாஸ்க் அணியாமலேயே தோன்றுகிறார் டிரம்ப். 

இது குறித்து சில நாட்களுக்கு முன்னர் அவர், “நாட்டு அதிபர்கள், பிரதமர்கள், ராஜாக்கள், ராணிக்கள் உள்ளிட்டவர்களைப் பார்க்கும்போது மாஸ்க் அணிவது பற்றி யோசிக்கிறேன். ஆனால், நான் அணிய மாட்டேன் என்றே நினைக்கிறேன். அது எனக்கானது அல்ல,” என்றார்.

அதே நேரத்தில் வெள்ளை மாளிகளை மருத்துவ வல்லுநர்கள், டிரம்பின் மனைவி மெலனியா உள்ளிட்டவர்களும் கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று தொடர் பிரசாரம் செய்து வருகிறார்கள். 

இது ஒரு புறமிருக்க, டிரம்புக்கு ஆதரவாக செயல்படும் சில அமெரிக்க குழுக்கள், கொரோனா வைரஸ் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடு உத்தரவுகளை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். சில குழுக்கள் அமலில் உள்ள ஊரடங்கிற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி, மொத்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தலும் போலியானது என்றும் கோஷம் எழுப்பி வருகின்றனர். 

.