This Article is From Feb 16, 2019

‘’தீவிரவாத தாக்குதலை முன்கூட்டியே தடுக்க இந்தியாவுக்கு உதவி’’ – உறுதி அளித்தது அமெரிக்கா

புல்வாமா தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தொடர்பு கொண்டு பேசினார்.

‘’தீவிரவாத தாக்குதலை முன்கூட்டியே தடுக்க இந்தியாவுக்கு உதவி’’ – உறுதி அளித்தது அமெரிக்கா

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹைலைட்ஸ்

  • தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் ஜான் போல்டன் பேசியுள்ளார்
  • காஷ்மீர் தாக்குதலுக்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது
  • பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது
Washington:

தீவிரவாத தாக்குதலை முன்கூட்டியே தடுக்க தேவையான அனைத்து உதவிகளும் இந்தியாவுக்கு செய்து தரப்படும் என்று அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் ரிசர்வ் போலீசார் 40 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவுடன் நட்புறவில் இருக்கும் அனைத்து நாடுகளும் புல்வாமா தாக்குதலை கண்டித்துள்ளன.

இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, காஷ்மீர் தாக்குதல் குறித்து போல்டனிடம் தோவல் எடுத்துரைத்தார்.

மேலும் படிக்க - "பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது மத்திய அரசு"

5r2vd05o

இந்த உரையாடல் குறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு ஜான் போல்டன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

தீவிரவாத தாக்குதலை முன்கூட்டியே அறிந்து அதனை தடுப்பதற்கான அனைத்து உதவிகளையும் இந்தியாவுக்கு செய்வோம் என்று அஜித் தோவலிடம் நான் கூறினேன். ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக அவரிடம் 2 முறை பேசினேன். இந்த துயர சம்பவத்திற்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது. எந்தவொரு நாடும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா தெளிவாக உள்ளது.

இவ்வாறு போல்டன் கூறினார். பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு காஷ்மீர் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் அரியலூரை சேர்ந்த சிவச்சந்திரன், தூத்துக்குடியை சேர்ந்த சுப்ரமணியன் ஆகியோர் உள்பட மொத்தம் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த பின்னர், பாகிஸ்தானை எச்சரிக்கும் விதமாக அமெரிக் அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், ‘'பாகிஸ்தான் மண்ணில் எந்த தீவிரவாத அமைப்புக்கும் புகலிடம் அளிக்கக் கூடாது. இதனை அந்நாடு உறுதி செய்ய வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 

மேலும் படிக்க - "ராணுவ வீரர்கள் உடல்களுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி அஞ்சலி!"

.