This Article is From Aug 06, 2019

விபத்துக்குள்ளான உன்னாவ் பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடம்: டெல்லி எய்ம்ஸ் அறிக்கை

உயிர் காக்கும் கருவிகள் துணையுடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் உன்னாவ் பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்துக்குள்ளான உன்னாவ் பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடம்: டெல்லி எய்ம்ஸ் அறிக்கை

சாலையில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டு எவ்வித தாமதமும் இன்றி சிறுமி பத்திரமாக கொண்டு சேர்க்கப்பட்டார்.

New Delhi:

விபத்துக்குள்ளான உன்னாவ் பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை அளித்துள்ளது.

உன்னாவ் பகுதியில் பெண் ஒருவர் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மீது பாலியல் புகார் அளித்தார். இதனையடுத்து அந்த எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அந்தப் பெண்ணின் தந்தை சிறையில் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டார். 

அதைத்தொடர்ந்து, கடந்த வாரத்தில் அந்தப் பெண் சென்ற கார் மீது லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் உறவினர்கள் இருவர் பலியான நிலையில், சிறுமியும் அவரது வழக்கறிஞரும் பலத்த காயமடைந்தனர்.

இதனிடையே, அந்தப் பெண் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கடிதம் எழுதியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான அனைத்து வழக்குகளையும் டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

அத்துடன் டெல்லி நீதிமன்றத்தில், இந்த வழக்கை தினசரி விசாரித்து 45 நாட்களுக்குள் முடிக்கவேண்டும். அத்துடன் பெண்ணிற்கு தற்காலிக நிவாரண தொகையாக உத்தரப்பிரதேச அரசு 25 லட்சம் ரூபாயை அளிக்கவேண்டும். அத்துடன் இந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி தற்போது உன்னாவ் பெண், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். லக்னோவிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார்.

இதற்காக கிங் ஜார்ஜ் மருத்துவமனையிலிருந்து லக்னோ விமான நிலையம் வரையிலும், டெல்லி விமான நிலையத்திலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனை வரையிலும் சாலையில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டு எவ்வித தாமதமும் இன்றி சிறுமி பத்திரமாக கொண்டு சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், விபத்துக்குள்ளான உன்னாவ் பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை அளித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், உனாவ் பெண்ணின் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிர் காக்கும் கருவிகள் துணையுடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் உன்னாவ் பெண் சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.