This Article is From Aug 16, 2020

உ.பியில் 13 வயது சிறுமி வன்கொடுமைக் கொலை; பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியானது!!

பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது கண்கள் வெளியேற்றப்பட்டதாகவோ அல்லது நாக்கு வெட்டப்பட்டதாகவோ தெரியவில்லை என்றும், கண்களுக்கு அருகில் கீறல்கள் இருந்தன என்றும் இதற்கு கரும்பு இலைகள் காரணமாக இருக்கலாம் என்றும் உ.பி காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கற்பழிப்பு, கொலை மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என காவல்துறை தகவல்

ஹைலைட்ஸ்

  • உ.பியின் லக்கிம்பூர் கெரி மாவட்ட 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
  • பலாத்காரம் செய்யப்பட்டு கொலை
  • வயல்களில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
Lucknow:

சமீபத்தில் உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் லக்னோவிலிருந்து 130 கி.மீ தூரத்தில் நேபாள எல்லைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் அரங்கேறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் வயல்களில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

முன்னதாக “சிறுமி வெள்ளிக்கிழமை மதியம் காணாமல் போயிருந்தார். நாங்கள் அவளை எல்லா இடங்களிலும் தேடிச் சென்றோம். கரும்பு வயலில் அவளைக் கண்டுபிடித்தோம். அவளுடைய கண்கள் வெளியேற்றப்பட்டிருந்தன. அவளுடைய நாக்கு வெட்டப்பட்டு துப்பட்டா மூலம் கழுத்தை நெரிக்கப்பட்டிருந்தது” என்று சிறுமியின் தந்தை கூறியிருந்தார்.

ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது கண்கள் வெளியேற்றப்பட்டதாகவோ அல்லது நாக்கு வெட்டப்பட்டதாகவோ தெரியவில்லை என்றும், கண்களுக்கு அருகில் கீறல்கள் இருந்தன என்றும் இதற்கு கரும்பு இலைகள் காரணமாக இருக்கலாம் என்றும் உ.பி காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

“சிறுமியின் பிரேத பரிசோதனை பாலியல் பலாத்காரத்தை உறுதிப்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். கற்பழிப்பு, கொலை மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நாங்கள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளோம்” என்று, மாவட்ட காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி இந்த சம்பவத்தை ட்விட்டரில் கண்டித்து "மிகவும் வெட்கக்கேடானது" என்று கூறியுள்ளார். "இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால் சமாஜ்வாடி கட்சியின் அரசாங்கங்களுக்கும் தற்போதைய பாஜகவுக்கும் என்ன வித்தியாசம்?” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத், “பாஜக அரசாங்கத்தின் கீழ் தலித் ஒடுக்குமுறை உச்சத்தில் உள்ளது. எங்கள் மகள்கள் பாதுகாப்பாக இல்லை, எங்கள் வீடுகள் பாதுகாப்பாக இல்லை, எல்லா இடங்களிலும் அச்சத்தின் சூழ்நிலை உள்ளது. எனவே முதல்வர் யோகி ராஜினாமா செய்யுங்கள்.” என்று கூறியுள்ளார்.

கடந்த வாரம், டெல்லியில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள மேற்கு உத்தரப்பிரதேச ஹப்பூரில் 6 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். காவல்துறையினர் வெள்ளிக்கிழமை குற்றவாளியை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.