This Article is From Aug 30, 2020

அன்லாக் 4; மெட்ரோ ரயில்கள் இயக்க அனுமதி! முழு விவரம்!!

செப்.21 முதல் சமூக, அரசியல், கல்வி, விளையாட்டு, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும், இதர நிகழ்ச்சிகளுக்கும் 100 பேருடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது

அன்லாக் 4 வழிகாட்டுதலை உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஏறத்தாழ 35 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு அறிவித்திருந்த அன்லாக் 3 செயல்முறை நாளையுடன் முடிவடைகின்றது. இந்நிலையில் அன்லாக் 4 செயல்முறைக்கான விவரங்களை மத்திய அரசு தற்போது தெரிவித்துள்ளது.

இதன்படி செப்டம்பர் 7 முதல் மெட்ரோ ரயில்கள் மறு தொடக்கத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுப்பாட்டு மண்டலங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைத் தவிர்த்து பிற இடங்களுக்கு பொது முடக்கம் இல்லையென்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், செப்.21 முதல் சமூக, அரசியல், கல்வி, விளையாட்டு, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும், இதர நிகழ்ச்சிகளுக்கும் 100 பேருடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளி கல்லூரிகள், உள் அரங்குகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அன்லாக் 4 செயல்முறையானது செப்டம்பர் 30 வரை நடைமுறையில் இருக்கும்.

“உள்துறை அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதலின்படி மெட்ரொ ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி டெல்லி மெட்ரோ ரயில் சேவை செப்.7 முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும். பொது மக்களின் பயன்பாட்டின் போது பின்பற்றக்கூடிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மெட்ரோ நிர்வாகம் விரைவில் வெளியிடும். ” என டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பள்ளிகளை பொறுத்த அளவில், ஆன்லைன் வகுப்பு மற்றும் அது சார்ந்த பணிகளுக்காக ஆசிரியர்கள் 50 சதவிகிதத்திற்கு மிகாமல் பள்ளிகளுக்கு வந்து செல்லலாம். ஆசிரியர்களிடமிருந்து வழிகாட்டுதலை பெற விரும்பும் 9-12 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள பள்ளிகளுக்கு சுய விருப்பம் இருந்தால் வந்து செல்வதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 62 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இம்மாத தொடக்கத்தில் உலக அளவில் அதிக கொரோனா எண்ணிக்கையை ஒரு நாள் விகிதம் அடிப்படையில் இந்தியா பதிவு செய்திருந்தது.

.