This Article is From Jun 15, 2020

பாகிஸ்தானில் இருந்த 2 இந்திய தூதரக அதிகாரிகளைக் காணவில்லை: பகீர் தகவல்… பின்னணி என்ன?

இந்த அதிர்ச்சிகர சம்பவம் குறித்து இந்திய அரசு தரப்பு, பாகிஸ்தான் அரசிடம் புகார் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மீது சில கறார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஹைலைட்ஸ்

  • இன்று காலை இச்சம்பவம் நடந்துள்ளது
  • இந்திய தரப்பு இது குறித்து கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது
  • இந்திய - பாகிஸ்தான் இடையிலான உறவில் சுமூகப் போக்கு உள்ளது
New Delhi:

பாகிஸ்தானில் இருந்த 2 இந்திய தூதரக அதிகாரிகளை இன்று காலை முதல் காணவில்லை என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று காலை 8 மணியிலிருந்து இருவரையும் காணவில்லை எனத் தெரிகிறது. 

இந்த அதிர்ச்சிகர சம்பவம் குறித்து இந்திய அரசு தரப்பு, பாகிஸ்தான் அரசிடம் புகார் தெரிவித்துள்ளது.

இரண்டு வாரத்துக்கு முன்னர் புது டெல்லியில் இருந்த இரண்டு பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியது இந்திய அரசுத் தரப்பு. இப்படிப்பட்ட சூழலில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கடந்த சில வாரங்களாக பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மீது சில கறார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த கூடுதல் கண்காணிப்பு குறித்து இந்தியத் தரப்பு தொடர்ந்து புகார் எழுப்பி வந்தது. 

சமீபத்தில் பாகிஸ்தானில் உள்ள தூதரக அதிகாரியான கவுரவ் அலுவாலியாவின் வாகனத்தை இரு சக்கர வாகனத்தில் வந்த பாகிஸ்தான் உளவுத் துறையைச் சேர்ந்த ஒருவர் பின் தொடர்ந்துள்ளார். 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம், அந்நாட்டு அரசிடம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. 

தங்களது தூதரக அதிகாரிகள் மீது தொடர்ந்து தொடுக்கப்பட்ட 13 தாக்குதல்களைச் சுட்டிக்காட்டி இந்திய தூதரகம், ‘இதைப் போன்ற சம்பவங்கள் இனி நடக்காத வண்ணம் பாகிஸ்தான் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று தெரிவித்துள்ளது. 

காஷ்மீர் எல்லையில் இந்திய மற்றும் பாகிஸ்தான் தரப்புகளுக்கு இடையில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து வருவதால், இரு நாட்டு உறவிலும் கடந்த சில ஆண்டுகளாக உரசல் போக்கு நிலவி வருகிறது. 

.