This Article is From Dec 18, 2018

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 2 மனுக்களை தாக்கல் செய்யும் தமிழக அரசு

காப்பர் ஆலையை திறக்கும் விவகாரத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தமிழக அரசுக்கு எதிராக ஏற்கனவே கேவியட் மனுவை தாக்கல் செய்திருக்கிறது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 2 மனுக்களை தாக்கல் செய்யும் தமிழக அரசு

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 2 மனுக்களை தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த வாரத்திற்குள் மனுத்தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தபோது கடந்த மே மாதம் 22-ம்தேதி போலீசார் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தார்கள். இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்ததால் 22 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

இதனை எதிர்த்து சட்ட நடவடிக்கைகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த வாரம் தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை ஏதும் இல்லை என்று கூறப்பட்டது.

இதனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். நிலைமையை கட்டுக்குள் வைப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் போலீசாரை உஷார்படுத்தி பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

தனது சட்ட நடவடிக்கையின் அடுத்த கட்டமாக உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் கேவியட் மனுவை தாக்கல் செய்தது. இதனால், ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு தெரிவிக்காமல் தமிழக அரசுக்கு சாதகமான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பசுமை தீர்ப்பாயத் உத்தரவை எதிர்த்து ஒரு மனவும், தமிழக அரசின் மனுவை விசாரிப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்று உத்தரவிடக்கோரி இன்னொரு மனுவும் என 2 மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.

.