This Article is From Jan 02, 2020

புத்தாண்டு அன்று மெரினாவில் தமிழக BJP போராட்டம்… விஸ்வரூபம் எடுக்கும் நெல்லை கண்ணன் விவகாரம்!

போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் பங்கேற்றனர்.

புத்தாண்டு அன்று மெரினாவில் தமிழக BJP போராட்டம்… விஸ்வரூபம் எடுக்கும் நெல்லை கண்ணன் விவகாரம்!

இன்று தமிழக பாஜக தலைவர்கள், நெல்லை கண்ணனைக் கைது செய்யக் கோரி மெரினா கடற்கரையில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில், தமிழறிஞர் நெல்லை கண்ணன், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவர் பேச்சைத் தொடர்ந்து பாஜகவினர் காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளனர். அவரது பேச்சுக்கு அரசியல் தளத்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல்கள் அதிகரித்து வருகின்றன. இன்று தமிழக பாஜக தலைவர்கள், நெல்லை கண்ணனைக் கைது செய்யக் கோரி மெரினா கடற்கரையில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

முன்னதாக பொதுக் கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணன், “எனக்கு மோடி மீது எந்த கோபமும் இல்லை. அவர் முட்டாள். அமித்ஷாதான் மத்திய அரசின் மூளையாக செயல்பட்டு வருகிறார். அவரை நீங்கள் முடிப்பீர்கள் என்று நினைக்கிறேன்…” என எல்லோரையும் ஒருமையிலேயே பேசினார். தொடர்ந்து அவர் சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிராக பல்வேறு தரவுகளை முன்வைத்துப் பேசினார். அந்தக் கூட்டத்தில் பெருந்திரளான முஸ்லிம்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

அந்தப் பேச்சு நேற்றிலிருந்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக சீமான், “பெருமதிப்பிற்குரிய அப்பா தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சு சனநாயகத்தின் வழியே பாசிசத்தை கட்டமைக்க முயலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் கொடுங்கோல் ஆட்சி முறைக்கெதிரான அறச்சீற்றமே. 

a14fdbs

நாட்டின் பொருளாதாரத்தைச்சீர்குலைத்து, மதத்தால் நாட்டைத்துண்டாட முயலும் பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும் என்பதே அப்பேச்சின் நோக்கம்.அது வன்முறையைத்தூண்டுவதாக கைது செய்யக்கோருவது அறிவிலித்தனமானது. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் தனிநபரல்ல! ஒட்டுமொத்த தமிழர்களின் சொத்து,” என்று கருத்து தெரிவித்துள்ளார். 

இதனால் கொதித்தெழுந்த, பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா, “முஸ்லீம் பயங்கரவாதிகள் மத்தியில் மாண்புமிகு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை கொலை செய்யத் தூண்டிப் பேசிய தேசவிரோத நெல்லை கண்ணனை எந்த ஆன்மீக நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம் என இந்துக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

h raja 650

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை கொலை செய்யத் (சோலிய முடிப்பீங்க) தூண்டிய நெல்லைக் கண்ணன் இன்னமும் ஏன் கைது செய்யவில்லை. கல்யாணராமனின் முகநூல் பதிவிற்கு கைது செய்து ரிமாண்ட் செய்த காவல்துறை பிரதமர், உள்துறை அமைச்சர் விஷயத்தில் வெறும் வழக்குப்பதிவு நாடகமா?

நெல்லை கண்ணன் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி. கண்ணன் பேசியுள்ளது அவதூறு பேச்சல்ல. கொலைக்கு தூண்டுதல் (சோலிய முடி). ராஜிவ்காந்தி படுகொலை போன்ற சம்பவத்தை மீண்டும் தமிழகத்தில் நடத்த திட்டமிடுவதாகவே தெரிகிறது,” என்று காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சீமானையும் கைது செய்ய வேண்டும் என்று வலிறுத்தியுள்ளார் எச்.ராஜா. 

0tue82eo

இப்படிப்பட்ட சூழலில்தான் இன்று சென்னை, மெரினா கடற்கரையில் போராட்டத்தில் குதித்தனர் பாஜகவினர். இந்தப் போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் பங்கேற்றனர். அவர்களை கலைந்து போகச் சொல்லி சென்னை காவல் துறை வலியுறுத்தியது. அவர்கள் செல்லாத காரணத்தால், சுமார் 150 பேரைக் கைது செய்தது போலீஸ். பாஜகவின் போராட்டத்தால் மெரினா கடற்கரை இன்று பரபரப்பாக காணப்பட்டது. 

.