This Article is From Aug 12, 2019

அத்திவரதர் விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டரை ஒருமையில் திட்டியது ஏன்?-காஞ்சி ஆட்சியர் விளக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரதராஜர் கோயிலில் அத்தி வரதர் விழா நடந்து வருகிறது. இதில் காவலரை மாவட்ட ஆட்சியர் ஒருமையில் திட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அத்திவரதர் விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டரை ஒருமையில் திட்டியது ஏன்?-காஞ்சி ஆட்சியர் விளக்கம்

அத்தி வரதரை நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

Kancheepuram:

காஞ்சிபுரம் மாவட்டம் அத்தி வரதர் விழாவில் இன்ஸ்பெக்டரை ஒருமையில் திட்டியது குறித்து காஞ்சி ஆட்சியர் பொன்னையா விளக்கம் அளித்துள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரதராஜர் கோயிலில் அத்தி வரதர் விழா நடந்து வருகிறது. இதில் காவலரை மாவட்ட ஆட்சியர் ஒருமையில் திட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் விஐபிக்கள் செல்லும் வழியில் பொதுமக்களை அனுமதித்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் பொன்னையா, 'என்ன ஸ்டேஷன் நீ? எந்த ஸ்டேஷன்?' என்று கேள்வி கேட்கிறார். அதற்கு இன்ஸ்பெக்டர் தடுமாறி மன்னிப்பு கேட்கிறார். இதற்கு பிறகு பேசும் கலெக்டர் 'ஐ.ஜி. எங்க, ஐ.ஜி.ய கூப்பிடுங்க' என்று சத்தபோட்டு தொடர்ந்து, 'உன்னை சஸ்பெண்ட் பண்ணாதான் தெரியும். போலீஸ் காரங்கள்லாம் திமிர்த்தனம் பண்றீங்களா?' என்று ஒருமையில் பேசினார்.

இந்த வீடியோ கடந்த 2 நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக காஞ்சி ஆட்சியர் பொன்னையா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

சில நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அத்தி வரதர் விழாவில் காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் ஒரே குடும்பமாக செயல்பட்டு வருகிறோம். எல்லோரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுகிறோம்.

சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் எங்கேயோ ஒருபக்கம் இருந்து கொண்டு இங்குள்ள உண்மை நிலவரம் தெரியாமல் கருத்துக்களை கூறுகின்றனர். சில தவறான செய்திகளை பரப்புகிறார்கள். அந்த தவறான செய்திகள் மூலம் கருத்து வேறுபாடுகளை பரப்ப வேண்டாம் என்ற வேண்டுகோளை விடுக்கிறோம். 

இந்த விழா என்பது ஒரு கூட்டு முயற்சி. அதற்கு இடையூறு இல்லாமல் எல்லோரும் எங்களுக்கு உதவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு அவர் கூறினார். 

.