சில நாட்களுக்கு முன்னர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ‘தமிழகத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் நியமிக்கப்படும் துணை வேந்தர்கள் பதவிக்கு பல கோடி ரூபாய் பணம் கைமாறுகிறது’ என்று பரபரப்புக் குற்றச்சாட்டை தெரிவித்தார். இதையடுத்து தமிழக எதிர்கட்சித் தலைவரும், திமுக-வின் தலைவருமான மு.க.ஸ்டாலின், ஆளுநரை நேரில் சந்தித்துப் பேச அனுமதி கேட்டுள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ‘தமிழகத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை நியமிக்க பல கோடி ரூபாய் பணம் கைமாறுகிறது. இதை நான் முதலில் நம்பவில்லை. ஆனால், அது குறித்து எனக்கு நேரடியாக தெரியவந்த போது, நடவடிக்கை எடுக்க முடிவெடுத்தேன். நான் துணை வேந்தர்களை தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்கிறேன்’ என்று பேசினார்.
இதற்கு தமிழக எதிர்கட்சிகள், ‘வெறுமனெ குற்றம் சுமத்தாமல், குற்றச்சாட்டுக்கா ஆதாரத்தை ஆளுநர் வெளியிட வேண்டும்’ என்று தெரிவித்தன.
இதையடுத்து மு.க.ஸ்டாலின், ‘தமிழகத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களிலும் பல்வேறு துறைகளிலும் ஊழல் மலிந்திருப்பதாக ஆளுநரே வெளிப்படையாக பேசியுள்ளார். இதையடுத்து, அவரை நேரில் சந்திக்க அனுமதி கோரியுள்ளோம். அப்போது, ஊழல் புகார் குறித்து நடவடிக்கை எடுங்கள் என்று அவரிடம் வலியுறுத்துவோம்’ என்று கூறியுள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)