
ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
கேரளாவில் கைதானவருக்கும் இலங்கை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட ஸஹ்ரான் ஹாஷிமுக்கும் தொடர்புள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில், 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களில் 42 பேர் வெளிநாட்டவர் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக இந்த சம்பவத்திற்கு உள்ளூர் அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தே காரணம் என தகவல்கள் வெளியானது. அதன் பின்னர் குண்டுவெடிப்புகளுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இதற்கு ஸஹ்ரான் ஹாஷிம் என்பவர்தான் மூளையாக செயல்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் 2-3 மாதங்களை கடந்த ஆண்டு இந்தியாவில் கழித்ததாகவும், இந்தியர்கள் சிலருடன் அவர் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக அவர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
விசாரணையின் தொடர்ச்சியாக கேரள மாநிலம் பாலக்காட்டில் ரியாஸ் அபுபக்கர், அபு துஜானா என்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஹாஷிமுடன் தொடர்பில் இருந்ததாக தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது.