This Article is From Jul 11, 2019

காங்கிரசின் தற்காலிக தலைவராக சோனியா நியமிக்கப்படுவாரா? - புதிய தகவலால் பரபரப்பு!!

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சந்தித்த படு தோல்வியைத் தொடர்ந்து தலைவர் பதவி வேண்டவே வேண்டாம் என்று ராகுல் காந்தி கடிதம் அளித்திருக்கிறார்.

காங்கிரசின் தற்காலிக தலைவராக சோனியா நியமிக்கப்படுவாரா? - புதிய தகவலால் பரபரப்பு!!

ராகுலை தொடர்ந்து பல மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர்.

New Delhi:

காங்கிரசின் தற்காலிக தலைவராக சோனியா நியமிக்கப்படுவாரா என்ற பேச்சு தற்போது எழுந்துள்ளது. இதற்கு சோனியா காந்தியின் முடிவு குறித்தும் தகவல்கள் பரவத் தொடங்கியுள்ளன. இதனால் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. 

மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கியது. 

இதையடுத்து ராகுலை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றன. நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் பேரணி, பொதுக்கூட்டங்களை நடத்தியும், தீர்மானங்கள் போட்டும் ராகுல் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். 

இருப்பினும் ராகுல் தனது முடிவில் விடாப்பிடியாக இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு அடுத்த கட்சி தலைவரை தேர்வு செய்யுங்கள் என்று ராகுல் வலியுறுத்தினார். இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சுஷில் குமார் ஷிண்டே ஆகிய 2 பேரில் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியானது. 

இந்த பட்டியலில் தற்போது முகுல் வாஸ்னிக்கும் இணைந்துள்ளார். இதற்கிடையே சமீபத்தில் பேட்டியளித்த பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரிந்தர் சிங் காங்கிரசுக்கு இளம் ரத்தத்தை பாய்ச்ச வேண்டும் என வலியுறுத்தினார். 

இருப்பினும் தலைவர் விவகாரத்தில் காங்கிரஸ் இன்னும் தெளிவான முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் என்.டி.டி.வி.க்கு பேட்டியளித்த மூத்த தலைவர் கரன் சிங் ராகுலை கெஞ்சி ஒரு மாதத்தை காங்கிரஸ் வீணடித்து விட்டது என்றார்.

ராகுல் ராஜினாமாவைத் தொடர்ந்து ஜோதிராதித்ய சிந்தியா, மிலிந்த் தியோரா போன்ற மாநில தலைவர்கள் ராஜினாமாவை அறிவித்துள்ளனர். போதாக்குறைக்கு கர்நாடகத்தில் காங்கிரஸ் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் சோனியா காந்தியை தற்காலிக தலைவராக நியமிக்க வேண்டும் என்று கட்சிக்குள் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. 

இருப்பினும் இதற்கு சோனியா சம்மதம் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே உடல்நலக் குறைவு காரணமாகத்தான் கட்சி தலைவர் பொறுப்பை ராகுலிடம் சோனியா விட்டுச் சென்றார். தற்போதும் உடல்நிலை ஒத்துழைக்காததால் தற்காலிக தலைவராகக் கூட செயல்பட முடியாது என்று நெருக்கமானவர்களிடம் சோனியா கூறியுள்ளார். இதனால் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. 
 

.