This Article is From Feb 07, 2019

தினகரனுக்கு 'குக்கர் சின்னம்' கிடைக்குமா..?- உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

டிடிவி.தினகரன், தனது கட்சிக்கு ‘ப்ரெஷர் குக்கர்’ சின்னத்தை ஒதுக்கித் தர வேண்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்

தினகரனுக்கு 'குக்கர் சின்னம்' கிடைக்குமா..?- உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

முதலில், ‘அதிமுக கட்சியையும் இரட்டை இலைச் சின்னத்தையும் மீட்பதே தனது பிரதான நோக்கம்’ என்று கூறி வந்தார் தினகரன்.

ஹைலைட்ஸ்

  • தினகரன் சுயேட்சையாக 'குக்கர்' சின்னத்தில்தான் போட்டியிட்டார்
  • தற்போது அமமுக-வுக்கு அதே சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றார்
  • ஆனால், அவர் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், தனது கட்சிக்கு ‘ப்ரெஷர் குக்கர்' சின்னத்தை ஒதுக்கித் தர வேண்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது அந்த வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன்றம்.

2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஜெயலலிதா, சட்டமன்ற உறுப்பினராக இருந்த தொகுதியான ஆர்.கே.நகருக்கு இடைத் தேர்தல் நடந்தது. அப்போது சசிகலாவின் அண்ணன் மகனான தினகரன் முதன்முறையாக எம்.எல்.ஏ தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டார். அவருக்கு தேர்தல் ஆணையம் சார்பில், ‘குக்கர் சின்னம்' ஒதுக்கித் தரப்பட்டது. 

தேர்தல் பிரசாரங்களின் போது தினகரன், ‘ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தலைமையிலான துரோக கும்பளை ப்ரஷர் செய்து வெடிக்க வைக்கப் போவது இந்த குக்கர்தான்' என்றெல்லாம் பிரசாரம் செய்தார். இந்தப் பிரசார யுக்தி நல்ல பலன் தந்தது. தேர்தல் முடிவுகள் தினகரனுக்குச் சாதகமாக வந்தது. அதிமுக வேட்பாளரை விட தினகரன், 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆபார வெற்றி பெற்றார். திமுக, அந்த இடைத் தேர்தலில் டெபாசிட் இழந்தது. தினகரனின் அரசியல் கம்-பேக் ஆக அமைந்தது ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்தான். 

முதலில், ‘அதிமுக கட்சியையும் இரட்டை இலைச் சின்னத்தையும் மீட்பதே தனது பிரதான நோக்கம்' என்று கூறி வந்தார் தினகரன். ஆனால், அமமுக என்கின்ற தனிக் கட்சி ஆரம்பித்த உடன், ‘எங்கள் கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கித் தர வேண்டும்' என்று தொடர்ந்து வாதாடி வந்தார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடினார் தினகரன்.

அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும். 4 வாரத்துக்கு இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப்பட வேண்டும். அப்படி டெல்லி நீதிமன்றம் முடிவுக்கு வர முடியவில்லை என்றால், தேர்தல் ஆணையம் இது குறித்து முடிவெடுக்கலாம்' என்று தீர்ப்பளித்துள்ளது. 

இந்த விவகாரத்தில் முன்னர் கருத்து தெரிவித்திருந்த தேர்தல் ஆணையம், 'இன்னும் தினகரனின் அமமுக அங்கீகரிக்கப்படாததால், அந்தக் கட்சிக்கு சின்னம் ஒதுக்க முடியாது' என்று கூறியது குறிப்பிடத்தக்கது. 

 


 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.