New Delhi: சபரிமலை கோயில் தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தில் கூறியதாவது, " அனைத்து மதத்தினரும், சாதியினரும், சபரிமலைக் கோயிலுக்கு செல்லலாம். ஆனால், பெண்கள் கடுமையான 41 நாட்கள் விரதம் இருக்க முடியாது என்பதால் அனுமதிக்கப்படுவதில்லை" என்று வாதம் வைத்தது. பெண்களை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, "பெண்களை வழிபாடு செய்ய அனுமதிக்காதது, அரசியல் அமைப்புக்கு எதிரானது" என்று தெரிவித்தது.
10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களை, சபரிமலையில் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை அனுமதிக்கவும், தகுந்த ஆதாராம் பெற்ற பின்னே, கோயில் நிர்வாகம் அனுமதிக்கிறது.
தேவசம் போர்டு சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி " பெண்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது நோக்கம் இல்லை. ஆனால் இது பல ஆண்டுகளாக பக்தர்களால் நம்பப்படும் ஒரு விஷயம்" என்றார்.
இதுக்கு பதில் அளித்து நீதிமன்ற அமர்வு " 41 நாள் விரதம் என்ற பெயரில், நீங்கள் செய்ய நினைப்பதை நேரடியாக செய்யாமல் மறைமுகமாக செய்ய நினைக்கிறீர்கள்" என்று கருத்து தெரிவித்தது. "
ஒரு பெண்ணுக்கு 46 வயதிலேயே மாதவிடாய் சுழற்சி நின்றுவிட்டால், அவர் ஏன் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாமல் இருக்க வேண்டும். அனைத்து பெண்களும் கடவுளின் படைப்பே. அப்படி இருக்கும்போது அவர்களை ஏன் இந்த விஷயத்தில் தள்ளி வைக்க வேண்டும்." என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜுலை 24-ம் தேதி தொடங்குகிறது.