This Article is From May 02, 2019

''மோடி பதவியேற்றதில் இருந்து 942 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன'' - ராகுல் காட்டம்

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து எந்த இடத்திலும் வெடிகுண்டுகள் வெடிக்கவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல் ட்விட்டரில் ஒரு பதிவை ட்வீட் செய்துள்ளார்.

''மோடி பதவியேற்றதில் இருந்து 942 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன'' - ராகுல் காட்டம்

நாட்டின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்து வருவதாகவும், அதை மோடி காது கொடுத்து கேட்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

New Delhi:

''பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் 942 இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. இதை மோடி காதுகொடுத்து கேட்க வேண்டும்'' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். 

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 16 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து  நாட்டில் வெடிகுண்டுகளே வெடிக்கவில்லை என மோடி கூறியிருந்தார். 

இதனை கட்சிரோலி தாக்குதல் சம்பவத்துடன் இணைத்துள்ள ராகுல் காந்தி ட்விட்டரில் ஒரு பதிவை ட்வீட் செய்துள்ளார். அதில் அவர்,''பிரதமர் மோடி கடந்த 2014-ல் இருந்து இந்தியாவில் எந்தவொரு வெடிகுண்டும் வெடிக்கவில்லை என்று கூறியிள்ளார். ஆனால் புல்வாமா, பதான்கோட், உரி, கட்சிரோலி என 942 இடங்களில் கடந்த 2014-ல் இருந்து வெடிகுண்டுகள் வெடித்துள்ளன'' என்று குறிப்பிட்டுள்ளார். 
 

இதேபோன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரமும், மோடியை விமர்சித்துள்ளார்.

ட்விட்டரில் சிதம்பரம், ''மோரா, தண்டேவாடா, பலாமு, அவுரங்கபாத்,கோராபுத், சுக்மா, அவாபள்ளி, சத்தீஷ்கர் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. பிரதமர் மோடிக்கு நினைவு பாதிப்பு ஏற்பட்டு விட்டதா? அல்லது வேண்டுமென்றே தவறான தகவல்களை அளிக்கிறாரா? இந்த பதிவை மோடிக்கு யாராவது படித்துக் காட்டுவீர்களா?'' என்று கூறியுள்ளார். 
 


மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்திய இடத்தில் மகாராஷ்டிர போலீஸ் தலைவர் இன்று பார்வையிட்டார். அவருடன் உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உடன் சென்றனர். 

.