வரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கும் சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஹைலைட்ஸ்
- ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார் ராகுல்
- ஒப்பந்தம் போடப்பட்டபோது, பாரிக்கர் ராணுவத் துறை அமைச்சராக இருந்தார்
- கோவா முதல்வராவதற்காக, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் பாரிக்கர்
Panaji: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கோவா மாநில முதல்வரான மனோகர் பாரிக்கரை நேரில் சென்று சந்தித்துள்ளார். ரஃபேல் ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் ராகுல் நேற்று, ‘ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக மனோகர் பாரிக்கரிடம் ரகசிய ஆவணங்கள் இருக்கின்றன. அது அவருக்கு பிரதமரை மீஞ்சும் அதிகாரத்தைக் கொடுத்துள்ளது' என்று ட்விட்டரில் பதிவிட்டு அதிர்ச்சி கிளப்பினார். பாரிக்கர் கடந்த பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் பாரிக்கரின் அலுவலகத்துக்கே சென்று அவரை ராகுல் சந்தித்துள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த சந்திப்பு குறித்து ராகுல் தனது ட்விட்டரில், ‘சீக்கிரம் உடல் நலம் பெற வேண்டும் என்று பாரிக்கரை சந்தித்த போது சொன்னேன். இது ஒரு தனிப்பட்ட முறையிலான சந்திப்பு' என்றுள்ளார். அதே நேரத்தில், இந்த சந்திப்பில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து எதாவது பேசினார்களா என்பது பற்றி தெளிவில்லை.
நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல், ‘ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக கோவா ஆடியோ டேப் வெளியாகி 30 நாட்கள் கடந்துவிட்டன. இதுவரை எப்.ஐ.ஆர் அல்லது எந்தவித நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. அந்த டேப்பில் கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கரை தொடர்புபடுத்தி சொன்னது எல்லாம் உண்மைதான். அவரிடம் ரஃபேல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் இருக்கின்றன. இதுதான் பிரதமரை விஞ்சும் வகையில் அதிகாரத்தை பாரிக்கருக்குக் கொடுத்துள்ளது' என்றார்.
ராகுல், தனது தாய் சோனியா காந்தியுடன் கோவாவுக்கு தனிப்பட்ட முறையிலான பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போதுதான் பாரிக்கரை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
36 ரஃபேல் ஜெட் விமானங்களை ஒப்பந்தம் போட்டபோது, பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர் மனோகர் பாரிக்கர்தான். ஆனால், கோவாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலை அடுத்து, 2017 மார்ச் மாதம் மாநில முதல்வராக பொறுப்பேற்றார் பாரிக்கர். ஆனால், கடந்த சில மாதங்களாக கணைய பாதிப்பால் அவதிப்பட்டு வரும் பாரிக்கர், வீட்டிலேயே தங்கி சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்த சூழலில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுரேஜ்வாலா, ‘சமீபத்தில் கோவா அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியுள்ள பாரிக்கர், ‘யாரும் ரஃபேல் குறித்தான முழு ரகசியத்தைத் தெரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் ஆவணங்கள் எனது படுக்கையறையில் உள்ளது' என்று பேசியுள்ளார்' என்று கூறினார். தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்கள் மத்தியில் கோவா மாநில அமைச்சர் விஷ்வஜீத் ரானே, இது தொடர்பாக பேசுவதுபோல ஒரு ஆடியோவையும் வெளியிட்டார்.
காங்கிரஸின் இந்த குற்றச்சாட்டுகளை பாஜக தரப்பு மறுத்துள்ளது. மேலும் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கும் சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தொடர்ந்து, ‘ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை செய்ய கூட்டு நாடாளுமன்ற கமிட்டி அமைக்க வேண்டும்' என்று வலியுறுத்தி வருகிறது.