நாதுராம் கோட்சே குறித்த பிரக்யாவின் கருத்திற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்
New Delhi: மகாத்மா காந்தி படுகொலை குறித்து பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர் கூறியுள்ள கருத்துக்கள் "ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் இதயத்தை" பிரதிபலிக்கிறது என்றும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி "நேரத்தை வீணாக்க" விரும்பவில்லை என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
முன்னதாக, நேற்றைய தினம், SPG எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை திருத்த மசோதா தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் காரசாரமாக நடைபெற்றது. இதில் திமுக எம்.பி. ஆ.ராசா, இந்த விவகாரத்தை காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேயுடன் இணைத்து பேசினார்.
அப்போது குறுக்கீடு செய்த பாஜக எம்.பி. பிரக்யா தாகூர், 'தேசபக்தரை (கோட்சேவை) நீங்கள் உதாராணமாக குறிப்பிட்டு பேசக் கூடாது' என்று பேசினார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. அவரை அமைதி காக்குமாறு சக பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து, பிரக்யா தாகூர் பேசியதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தனது கருத்தை பிரக்யா திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்
இதைத்தொடர்ந்து, மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை தேசப்பக்தர் என்று பேசிய பிரக்யாவுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, மக்களவையில் பேசிய சாத்வி பிரக்யாவின் கருத்தில் பாஜகவுக்கு உடன்பாடில்லை என்றும் இது போன்ற கருத்துகளை ஒரு போதும் ஆதரிக்க முடியாது என்றும் பாஜக தெரிவித்துள்ளார். மேலும், பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்திலும் சாத்வி பிரக்யா அனுமதிக்கப்பட மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பதவில், "பயங்கரவாதி பிரக்யா, பயங்கரவாதி கோட்சேவை ஒரு தேசபக்தர் என்று அழைக்கிறார். அது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு சோகமான நாள்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, பிரக்யா கூறியுள்ள கருத்துக்கள் "ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் இதயத்தை" பிரதிபலிக்கிறது. அதனை மறைக்க முடியாது. அதனால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி "நேரத்தை வீணாக்க" விரும்பவில்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.