This Article is From Mar 29, 2020

கடுமையான நடவடிக்கைக்காக மன்னிப்புகோருகிறேன், ஆனால் இது அவசியமானது: பிரதமர் மோடி

உங்கள் வாழ்க்கையில் சிரமங்களை ஏற்படுத்திய இந்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், குறிப்பாக ஏழை மக்கள்.

கடுமையான நடவடிக்கைக்காக மன்னிப்புகோருகிறேன், ஆனால் இது அவசியமானது: பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி தனது வானொலி உரையில் "மான் கி பாத்" இல் கொரோனா வைரஸ் குறித்து பேசினார் ..

சர்வதேச அளவில் கொரோனா மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுத்தியிருப்பதைத் தொடர்ந்து இந்தியா அனைத்துவிதமான போக்குவரத்து சேவையையும் 21 நாட்களுக்கு முடக்கியுள்ளது. மேலும், ஏப்ரல் 14 வரை முழு முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது எனப் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் ‘மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில், பிரதமர் மோடி ஏழைகளைப் பாதித்த இந்த முடிவுக்காக தனது மன்னிப்பினை கோரியுள்ளார். முன்னதாக வட மாநிலங்களில் பல ஆயிரக்கணக்கான இடம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த கிராமத்திற்குச் செல்ல தொடங்கினர். ஆனால், 21 நாட்கள் முழு முடக்க நடவடிக்கை அமலிலிருந்த காரணத்தினால் பொது மற்றும் தனியார் போக்குவரத்துகள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டிருந்தன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான இடம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளைத் தோளில் சுமந்தவாறு  கிராமங்களுக்கு பல நூறு மைல் தொலைவுகளை நடந்தே கடக்க ஆளானார்கள்.

உலகம் முழுவதும் கொடிய பாதிப்புகளை உருவாக்கிய இந்த வைரஸ் தொற்றினை எதிர்கொள்ள முழு முடக்க நடவடிக்கை மட்டுமே ஒரே வழி எனப் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், "உங்கள் வாழ்க்கையில் சிரமங்களை ஏற்படுத்திய இந்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், குறிப்பாக ஏழை மக்கள். உங்களில் சிலர் என் மீதும் கோபப்படுவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் இந்த போரில் வெற்றி பெற இந்த கடுமையான நடவடிக்கைகள் தேவை" என்று மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமரின் இந்த முழு முடக்க நடவடிக்கையானது லட்சக்கணக்கான அன்றாட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை முற்றிலுமாக பாதித்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்புக்குப்பின்னர் வணிக வளாகங்கள், பள்ளி கல்லூரிகள், உடற்பயிற்சி கூடங்கள், மற்றும் நீச்சல் குளங்கள் என அணைத்தும் முடக்கப்பட்டன. இந்த அறிவிப்பால் பாதிப்படைந்த மக்களுக்கான உணவு வழங்கப்படும் என அறிவிப்பு வந்த போதிலும், சமூக சமையல் கூடங்கள் எங்கும் இன்னமும் திறக்கப்படவில்லை.

நேற்றைய தினத்தில், தொழிலாளி ஒருவர் தலைநகர் டெல்லியிலிருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள தனது கிராமத்திற்கு நடந்தே பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவரது கிராமத்தின் 80 கி.மீ முன்பு மாரடைப்பால் மயங்கி விழுந்து மரணமடைந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 979 ஆக உயர்ந்திருக்கிறது. பிரதமர் மோடி, இந்த முடக்க நடவடிக்கையினை பின்பற்றாதவர்கள் அவர்களுடைய சொந்த வாழ்க்கையில் விளையாடுகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

.