This Article is From May 27, 2019

பிரதமர் மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க ரஜினிகாந்திற்கு அழைப்பு!

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க ரஜினிகாந்திற்கு அழைப்பு!

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் இருக்கும் 542 தொகுதிகளில் 350 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, நாட்டின் பிரதமராக 2வது முறையாக நரேந்திர மோடி (68) வரும் 30ம் தேதி பதவியேற்கிறார். தனிபெரும்பான்மை பலத்துடன், நாட்டின் பிரதமராக தொடர்ந்து 2வது முறையாகப் பதவியேற்கும் வரலாற்று பெருமையை ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோருக்கு அடுத்து நரேந்திர மோடி பெறுகிறார்.

ஆனால், காங்கிரஸ் கட்சியோ 90 தொகுதிகளை பெறவே கடும் போட்டியை எதிர்கொண்டு, நீண்ட இழுபறிக்கு பின்னர், அதுவும் குறைந்தபட்ச வாக்குகள் வித்தியாசத்திலே 90 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுலின் சொந்த தொகுதியான அமேதியிலும் எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிர்தி இரானியிடம், ராகுல் கடும் தோல்வியை சந்தித்தார்.

எனினும், முன்னெச்சரிக்கையாக கேரளாவின் வயநாட்டிலும் ராகுல் போட்டியிட்டதால், அங்கு பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். உத்தரபிரதேசத்தில் சோனியா காந்தி போட்டியிட்ட ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸால் வெற்றி பெற முடிந்தது.

இந்த வரலாறு காணாத வெற்றியை தொடர்ந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை கிழக்கு உத்தர பிரதேசத்தில் இருக்கும், வாரணாசி தொகுதிக்கு சென்றார். அங்கு வாரணாசியில் இருக்கும் காசி விஸ்வநாத் கோயிலுக்கு சென்ற அவர் பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பாஜக தலைவர் அமித்ஷாவும், பிரதமர் மோடியுடன் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், வரும் 30ம் தேதி நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு மோடி அழைப்புவிடுத்துள்ளார். நட்பு அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

.