This Article is From Jun 30, 2020

சாத்தான்குளம் சம்பவத்தில் தூத்துக்குடி எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடி மாற்றம்!

ஜெயராஜ்,  பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தது தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  முன்னதாக விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை நீதிபதி, போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். 

சாத்தான்குளம் சம்பவத்தில் தூத்துக்குடி எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு  அதிரடி மாற்றம்!

சிபிஐ வழக்கை விசாரிப்பதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • சாத்தான்குளம் சம்பவத்தில் தூத்துக்குடி எஸ்.பி. மீது நடவடிக்கை
  • காத்திருப்போர் பட்டியலுக்கு அருண் கோபாலன் மாற்றப்பட்டுள்ளார்
  • உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது
Chennai:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் நடந்த தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை  தமிழக அரசின் உள்துறை பிறப்பித்துள்ளது. 

அருண் பாலகோபாலனுக்கு பதிலாக தற்போது விழுப்புரத்தில் காவல்துறை எஸ்.பி.யாக பணியற்றி வரும் எஸ். ஜெயக்குமார் தூத்துக்குடியின் புதிய எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, தூத்துக்கு மாவட்ட நிர்வாகம் சாத்தான்குளம் காவல் நிலையத்தை தனது  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. காவல் நிலைய பொறுப்பாளர்களாக தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் ஆகியோரை, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நியமித்துள்ளார்.

இதேபோன்று மதுரையில் இருந்து வந்த தடயவியல் ஆய்வுக்குழுவினர் சம்பவம் நடந்த காவல் நிலையத்தில் தடய மாதிரிகளை எடுத்துள்ளனர்.  நீதிமன்ற உத்தரவுப்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஜெயராஜ்,  பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தது தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  முன்னதாக விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை நீதிபதி, போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் கடந்த  19-ம்தேதி, செல்போன்  கடை நடத்தி வரும் ஜெயராஜ் மற்றும் அவரது  மகன் பென்னிக்ஸ்  ஆகியோர் போலீசாரால் கைது  செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். படு காயங்களுடன் கோவில்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்கள் ஜூன் 23-ம்தேதி உயிரிழந்தனர்.

காவல் நிலையத்தில் வைத்து இருவரும் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டதால் படுகாயம் அடைந்து இருவரும் உயிரிழந்திருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளளது.  இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள். 

இதற்கிடையே, சிபிஐ இந்த வழக்கை விசாரிப்பதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சிபிஐ வழக்கை எடுக்கும் முன்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  

.