This Article is From Aug 02, 2019

“தோல்விகள் இப்படி மாறக்கூடாது…”- ‘காஃபி டே’ நிறுவனர் தற்கொலை குறித்து நிர்மலா சீதாராமன்

“வியாபாரத்தில் தோல்வி ஏற்படுவதை ஒரு மோசமான விஷயமாக பார்க்கக் கூடாது"

“தோல்விகள் இப்படி மாறக்கூடாது…”- ‘காஃபி டே’ நிறுவனர் தற்கொலை குறித்து நிர்மலா சீதாராமன்

சித்தார்த்தாவின் அலுவலகம் கடந்த 2017 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் வருமான வரித் துறையால் சோதனை செய்யப்பட்டது.

New Delhi:

கஃபே காஃபி டே-வின் நிறுவனரான வி.ஜி.சித்தார்த்தாவின் தற்கொலை குறித்து பேசியுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “வியாபாரத்தில் தோல்வி ஏற்படுவதை ஒரு மோசமான விஷயமாக பார்க்கக் கூடாது. தோல்வி ஏற்பட்டால் கூட, அதை கண்ணியத்துடன் நடத்த நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.” என்று கூறியுள்ளார். 

இந்தியாவின் மிகப் பெரிய காஃபி செயின் கடைகளின் நிறுவனரான சித்தார்த்தா, கடந்த திங்கட் கிழமை மங்களூருவில் இருக்கும் நேத்ராவதி ஆற்றுக்கு அருகே மாயமானார். அப்போது அவர் தன்னுடைய ஓட்டுநரான பாசவராஜ் பாட்டில் உடன் இருந்தார். பாட்டில், காவல்துறையிடம் சித்தார்த்தா குறித்து கொடுத்த தகவல்படி, “பெங்களூருவிலிருந்து சாக்லேஷ்பூருவுக்கு செல்ல இருந்தோம். ஆனால், திடீரென்று அவர் மங்களூருவுக்குப் போகலாம் என்றார். மங்களூருவில் இருக்கும் பாலத்தைக் கடக்கும்போது வாகனத்தை நிறுத்தச் சொன்னார். பாலத்தின் மறுபக்கம் சென்று என்னைக் காத்திருக்கச் சொன்னார். ஆனால், அவர் வரவே இல்லை” என்று கூறியுள்ளார். 

60 வயதாகும் சித்தார்த்தா, காணாமல் போனதற்கு சில நாட்களுக்கு முன்னர், தனது கஃபே காஃபி டே போர்டு உறுப்பினர்களுக்கு ஓர் கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் வருமான வரித் துறை மன ரீதியாக துன்புறுத்தியது குறித்தும், நிறுவனத்தின் தனியார் பார்ட்னர்களில் ஒருவர் கொடுத்த அதீத அழுத்தம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். 

சித்தார்த்தாவின் அலுவலகம் கடந்த 2017 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் வருமான வரித் துறையால் சோதனை செய்யப்பட்டது. இந்தியாவிலிருந்து காஃபி கொட்டை ஏற்றுமதி செய்வதில், சித்தார்த்தாவின் நிறுவனமும் முன்னணியில் இருக்கிறது. அவரது குடும்பம் கடந்த 130 ஆண்டுகளாக காஃபி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது. 

.