This Article is From Jun 05, 2020

ஓராண்டுக்கு எந்தவித புதிய அரசு திட்டமும் கிடையாது: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்த கோரிக்கைகளை அனைத்து அமைச்சகங்களும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஓராண்டுக்கு எந்தவித புதிய அரசு திட்டமும் கிடையாது: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா மற்றும் ஆத்மநிர்பார் பாரத் திட்டங்களில் மட்டுமே அரசு சார்பில் செலவுகள் செய்யப்பட உள்ளன. 

நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அடுத்த ஓராண்டுக்கு எந்தவிதப் புதிய அரசாங்கத் திட்டங்களும் அறிமுகம் செய்யப்படாது என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்த கோரிக்கைகளை அனைத்து அமைச்சகங்களும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா மற்றும் ஆத்மநிர்பார் பாரத் திட்டங்களில் மட்டுமே அரசு சார்பில் செலவுகள் செய்யப்பட உள்ளன. 

இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவிட்-19 தொற்றால் அரசிடம் இருக்கும் பொது நிதியைப் பயன்படுத்துவதில் மாற்றங்கள் செய்வது கட்டாயமாகியுள்ளது. தொடர்ந்து ஏற்பட உள்ள மாற்றங்களுக்கு ஏற்றாற்போல நிதிப் பங்கீடுகளில் மாற்றம் செய்யப்படும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய பட்ஜெட் மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்களும் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளிலிருந்து விலக்குப் பெற செலவுகள் துறையிடமிருந்து அனுமதி வாங்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி வளர்ச்சி விகிதம் குறைந்துள்ள நிலையில் இந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது அரசு. அதேபோல கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்படும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். 

கொரோனா வைரஸால் துவண்டு போயுள்ள இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு, 20.97 லட்சம் கோடி ரூபாய் நிதி சீர்திருத்தத் திட்டத்தை முன்னர் அறிவித்தது. இந்திய ரிசர்வ் வங்கியிடமுள்ள சுமார் 8.01 லட்சம் கோடி ரூபாய் நிதியும் அடக்கியே, இந்த நிதித் தொகுப்பை அறிவித்தது அரசு. 

 நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2,26,770 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் 9,851 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 273 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது 1,10,960 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை 1,09,462 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 6,348 ஆக உயர்ந்துள்ளது. 

.