This Article is From Mar 21, 2020

டெல்லி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்!!

தூக்கிலிடப்படுவதற்கு 2 மணி நேரம் முன்பாக குற்றவாளிகளின் கடைசி மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

டெல்லி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்!!

நீதிமன்ற தீர்ப்புப்படி குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேறியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • காலை 5.30 -க்கு டெல்லி திகார் சிறையில் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்
  • நேற்றிரவு குற்றவாளிகள் தரப்பு செய்த கடைசிகட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை
  • நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளார்
New Delhi:

டெல்லி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் இன்று காலை 5.30-க்கு தூக்கிலிடப்பட்டனர். கடைசி கட்ட முயற்சியாகக் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகி தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு கோரினார். ஆனால் இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இதையடுத்து குற்றவாளிகள் அக்சய் தாகூர் 31, பவன் குப்தா 25, வினய் சர்மா 26, முகேஷ் சிங் 32 ஆகியோர் இன்று காலை 5.30-க்கு தூக்கிலிடப்பட்டனர்.

குற்றவாளிகள் அக்சய் தாகூர், பவன் குப்தா, வினய் சர்மா, முகேஷ் சிங் ஆகியோர் நேற்றிரவு உணவு உட்கொள்ளவில்லை. விடிய விடிய தூங்காமல் அவர்கள் விழித்தே இருந்ததாக திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நீதிக்காக காத்திருந்த காலங்கள் மிகுந்த வேதனையை அளித்ததாக அவர் கூறியுள்ளார். 

டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் குற்றவாளிகள் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் நிராகரித்திருந்தது.

கடைசிக்கட்ட முயற்சியாக நேற்றிரவு குற்றவாளிகள் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆவணங்கள் சரிவரத் தாக்கல் செய்யப்படவில்லை. குற்றவாளிகளைப் பாகிஸ்தான் அல்லது சீனா எல்லைக்கு அனுப்பி விடுங்கள். ஆனால் அவர்கள் தூக்கிலிட்டு விடாதீர்கள் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

இதனை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தைக் குற்றவாளிகள் தரப்பு அணுகியது. அங்கும் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இதையடுத்து இன்று காலை சரியாக 5.30-க்கு குற்றவாளிகளுக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

டிசம்பர் 16, 2012-ல் 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே தள்ளி விடப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அத்துடன் பெண்கள் பாதுகாப்புக்காகப் பல சட்டங்களையும், சட்ட மாறுதல்களையும், திட்டங்கள் உருவாக்கத்தையும் இந்த சம்பவம் உண்டாக்கியது. 

வழக்கில் 6 பேர் குற்றவாளிகள். அவர்களில் ஒருவர் சிறுவர் ஆவார். அவர் 3 ஆண்டுகள் சிறார் காப்பகத்தில் தண்டனையை முடித்துக்கொண்டு வெளியேறினார். இன்னொரு குற்றவாளி நீதிமன்றத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள, இன்று காலையில் மீதமுள்ள 4 பேருக்கும் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

.