This Article is From May 31, 2019

மோடியின் புதிய அமைச்சரவையில் ஏன் தமிழ்நாடு பிரதிநிதிகள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட போட்டி காரணமாகவே அதிமுக வாய்ப்பை தவற விட்டுள்ளது என்று பலரும் கூறிவருகின்றனர்.

மோடியின் புதிய அமைச்சரவையில் ஏன் தமிழ்நாடு பிரதிநிதிகள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை?

2வது முறையாக டெல்லியில் நேற்று பிரதமராக மோடி பதவியேற்றார்.

New Delhi:

58 உறுப்பினர்களை கொண்ட பிரதமர் மோடியின் புதிய அமைச்சவரையில், பாஜகவின் தமிழக கூட்டணிக் கட்சியான அதிமுகவில் இருந்து ஒருவர் கூட தேர்வு செய்யப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் இருக்கும் 542 இடங்களில் 352 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இதில், தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 38 தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதியிலும் வெற்றி பெற்றது. இதில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக அனைத்து தொகுதிகளிலும் கடும் தோல்வியை சந்தித்தது. 

இதில் அதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.ரவீந்தரநாத், எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை படுதோல்வி அடைய வைத்து பெரும் வெற்றி பெற்றார். எனினும், தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே துணை முதல்வர் ஓ.பி.எஸ் தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்டு பாஜக மேலிடத்தை வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து, 'தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே நபர் ரவீந்தரநாத்' என்று தேர்தல் முடிவுகளும் அவருக்கு சாதகமாக வர, அவர் தொடர்ந்து தனது மகனுக்கே மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருந்துள்ளார்.

இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினரோ, மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வைத்திலிங்கத்தின் பெயரை மத்திய அமைச்சர் பதவிக்கு பரிந்துரை செய்துள்ளனர். தொடர்ந்து, டெல்லியில் முகாமிட்ட இரு தரப்பினரும் தங்களுக்கு அழைப்பு வரும் நம்பிக்கையுடன் காத்திருந்துள்ளனர். 

அமைச்சரவை பதவியேற்புக்கு முந்தைய தினம் வரை யாரேனும் ஒருவர், அல்லது இருவரும் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவர் என்ற நம்பிக்கையில் அதிமுகவினர் இருந்து வந்தனர். இதனிடையே இருவருக்கும் மேலிடத்தில் இருந்த அழைப்பு வந்ததாக தகவல்கள் பரவியது. இதுகுறித்து ரவீந்திரநாத் கூறும்போது, பிரதமர் தரப்பில் இருந்து தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்றும் ஆனால், தனக்கு அழைப்பு வரும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து வைத்திலிங்கம் கூறும்போது, தனக்கும் பிரதமர் தரப்பிலிருந்து எந்த அழைப்புகளும் வரவில்லை என்றும், எனினும் தான் அழைப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கவும் இல்லை என்று கூறினார். 

இதுதொடர்பாக என்டிடிவியிடம் பாஜக தலைவர் ஒருவர் கூறும்போது, பிரதமரின் முடிவே. எனினும், கட்சியில் எந்த சலசலப்பும் வராமல் இருக்க, வைத்திலிங்கத்திற்கே வாய்ப்பு அளிக்கப்படும் என்று நம்புகிறோம். அவரே அனைத்து தரப்பாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நபராக இருப்பார் என்று அவர் கூறினார். 

தமிழக முதல்வராக இருந்து வந்த ஜெயலலிதா உயிரிழந்ததை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவி வகித்து வந்தார். இதைத்தொடர்ந்து, ஜெயலலிதாவின் சகோதரியான சசிகலா ஓபிஎஸ்-க்கு பதிலாக எடப்பாடி பழனிசாமியை முதல்வராக பொறுப்பேற்க வைத்தார். இதைத்தொடர்ந்து சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார். பின்னர் எடப்பாடி தரப்பும் பன்னீசெல்வம் தரப்பும் இணைந்ததை தொடர்ந்து, சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்கினர். 

22 சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், 9 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதன் மூலம் கட்சியினர் மத்தியில் எடப்பாடி தனது நம்பிக்கையை தக்கவைத்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜெயலலிதாவின் முடிவுக்கு மாறாக பாஜகவுடன் கூட்டணி வைத்த, ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பினர், தொடர்ந்து ஒரு வருடத்திற்கும் மேலாக பாஜகவுடன் மிக இணக்கமாக செயல்பட்டு வருகின்றனர். 

பாஜகவின் மற்ற கூட்டணி கட்சிகளான, அகாலி தளம் மற்றும் சிவசேனா போன்ற கட்சிகள் புதிய அமைச்சரவையில் பொறுப்பு வகுக்கின்றன. பீகாரில் நிதிஷ் குமார் தரப்பு மட்டும் அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்பட்டும் அதனை ஏற்க மறுத்துள்ளது. அவர்கள் இரண்டு அமைச்சரவை கேட்டதாகவும், ஆனால், மேலிடம் ஒரு இடம் மட்டுமே தந்ததால், மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. 

.