நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாது-
தேனி மாவட்டம், தேவாரம் அருகில் உள்ள பொட்டிபுரத்தில், ஐ.நா.மன்றத்தால் உலகப் பாரம்பரிய பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், பல லட்சம் டன் பாறைகளை உடைத்து நொறுக்கி, மத்திய அரசு ‘நியூட்ரினோ ஆய்வகம்' அமைப்பதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நான் தாக்கல் செய்த வழக்கில், மார்ச் 26, 2015 அன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமிழ்வாணன், இரவி ஆகியோரைக் கொண்ட அமர்வு நியூட்ரினோ திட்டத்திற்குத் தடை ஆணை பிறப்பித்தது.
நியூட்ரினோ ஆய்வகத்தால் தேனி மாவட்டம் மற்றும் கேரளப் பகுதிகளின் சுற்றுச்சூழல் கெடுவதுடன், நீராதாரமும் பாழ்படும்; கடுமையான கதிரியக்க ஆபத்தும் விளையும் என்பதால் தேனி மாவட்ட மக்களிடம் நான் பல கட்டங்களாக விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொண்டேன். 2018 மார்ச் 31-இல் மதுரையில் தொடங்கி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, போடி வழியாச் சென்று ஏப்ரல் 10 அன்று கம்பத்தில் முடிவடைந்த நடைப்பயணத்திலும் நியூட்ரினோ திட்டத்தின் பேராபத்தினை மக்களிடம் எடுத்துரைத்தேன்.
முல்லைப் பெரியாறு அணை உள்ளிட்ட 12 நீர்நிலைகளும், யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்த ‘பாரம்பரியமிக்க பாதுகாக்கப்பட்ட பல்லுயிரிய மண்டலமான', மேற்குத் தொடர்ச்சி மலையும், மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காவும் நியூட்ரினோ ஆய்வகம் அமைய உள்ள பொட்டிபுரத்திற்கு அருகே உள்ளன. எனவே, இத்திட்டத்திற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தேசிய வனவிலங்கு வாரியம் உள்ளிட்டவற்றின் அனுமதி பெற வேண்டும்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கில், எவ்வித ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் வாங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ‘தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தின்' தென்னக அமர்வு 2017 மார்ச் 20-இல் ரத்து செய்துள்ளது.
ஆனால், இதனைப் பொருட்படுத்தாத மத்திய அரசு, நியூட்ரினோ திட்டத்தைச் ‘சிறப்புத் திட்டமாக' பிரிவு ‘B' திட்டமாக அறிவித்து, எல்லாத் தடைகளையும் நீக்கி, சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சட்டங்களை மீறி முடிவு எடுத்தது. பிரதமர் தலைமையில் நடைபெற்ற அணுசக்தித் துறையின் ஆய்வுக் கூட்டத்தில், நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இந்திய அரசின் ‘தலைமைச் செயலரை'ப் பொறுப்பாளராக நியமித்து நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் மாநிலங்கள் அவையில் மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும், பசுமைத் தீர்ப்பாயத்திலும் நியூட்ரினோ தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கருத்தில் கொள்ளாமல், அனுமதி வழங்குவோம் என்று மத்திய அரசு கூறி இருப்பது கண்டனத்துக்கு உரியது.
இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.