This Article is From May 09, 2020

தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்வு! விதிமுறைகளுடன் டீக்கடைகள் செயல்பட அனுமதி

புதிதாக தளர்த்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும், நோய்க் கட்டுப்பாடு பகுதி எனப்படும் Containment Zone களுக்கு பொருந்தாது. சில கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டபோதிலும், கடுமையான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்வு! விதிமுறைகளுடன் டீக்கடைகள் செயல்பட அனுமதி

தனியார் நிறுவனங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் இன்று சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தியுள்ளது
  • நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு தளர்வுகள் பொருந்தாது என அரசு விளக்கம்
  • விதிமுறைகளுடன் டீக் கடைகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Chennai:

நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகத்தில் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தியுள்ளது. குறிப்பாக டீக்கடைகள், தனியார் நிறுவனங்கள் செயல்பட கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்றைக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
இந்த புதிய உத்தரவு நோய்க்கட்டுப்பாடு பகுதிகளுக்கு பொருந்தாது. அதன் விவரம்-

11.05.2020 திங்கள் கிழமை முதற்கொண்டு கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.

* அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி. பிற தனிக்கடைகள் காலை 10.30 முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி.

* சென்னையை தவிர்த்த மற்ற இடங்களில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட தனிக்கடைகளுக்கு அனுமதி.

* நோய்க் கட்டுப்பாடு பகுதிகளை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் காலை 6 - மாலை 7 மணி வரை டீக்கடைகள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. பார்சல் மட்டுமே வழங்கப்பட வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு, ஒரு நாளைக்கு 5 முறை கிருமி நாசினி தெளித்து கடையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள் நின்றோ, அமர்ந்தோ, ஏதும் உட்கொள்ள அனுமதியில்லை. இதை கடைபிடிக்க தவறும் கடைகள் மூடப்படும். 

* பெட்ரோல் பம்புகள் சென்னையை தவிர்த்து மற்ற பகுதிகளில் காலை 6 - இரவு 8 மணி வரையில் செயல்படும். தேசிய, மாநில நெடுஞ்சாலையில் 24 மணிநேரமும் பெட்ரோல் பம்புகள் செயல்படும்.

* பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் 33 சதவீத பணியாளர்களுடன் காலை 10.30 முதல் மாலை 6 மணி வரை செயல்படும். 

* சென்னையை தவிர்த்த தமிழகத்தின் மற்ற இடங்களில் அனைத்து தனியார் நிறுவனங்களும், 33 சதவீத பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* இவற்றை செயல்படுத்தும்போது தனிநபர் இடைவெளி, கிருமி நாசினிகளை பயன்படுத்தி பணியாளர் பாதுகாப்பை உறுதி செய்தல், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிமுறைகளை கடைபிடித்தல் ஆகியவை செயல்படுத்தப்படுகிறதா என்பதை அனைத்து மாவட்ட ஆட்சியர்ளும், மாநகராட்சி ஆணையர்களும், காவல்துறையினரும் அறிவுறுத்தப்படுகிறார்கள். 

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.