This Article is From Nov 11, 2019

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்குமா காங்கிரஸ்?!!

காங்கிரசின் உயர் மட்ட முடிவுகளை எடுக்கும் காங்கிரசின் காரியக் கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், மகாராஷ்டிர அரசியலில் சிவசேனாவை ஆதரிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

சிவசேனாவின் மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்த் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

New Delhi:

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ் கட்சி இன்று முக்கிய முடிவு எடுக்கவுள்ளது. இது மகாராஷ்டிர அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்திருக்கிறது. தேர்தலுக்கு முன்பு பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்திருந்தன. எதிர்த்தரப்பில் தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் சேர்ந்து தேர்தலை சந்தித்தன. 

தேர்தலில் பாஜக 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றன. மொத்தம் 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதற்கு 145 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தேர்தலுக்கு முந்தைய கூட்டணியின்படி, பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளுக்கு பெரும்பான்மைக்கும் அதிகமான எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இதனால், மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன்பின்னர்தான் சிவசேனா வைத்த கோரிக்கைகள், பாஜக வட்டாரத்தை அதிர்வை ஏற்படுத்தின. ஆட்சியிலும், அமைச்சரவையிலும் பாதிப் பங்கு தங்களுக்கு வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. இதற்கு பாஜக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் பிரச்னை நீண்டு கொண்டே செல்கிறது. 

யாரும் ஆட்சியமைக்காத நிலையில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தனிக்கட்சியான பாஜகவை, ஆட்சியமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார். இருப்பினும், தாங்கள் ஆட்சியமைக்கப் போவதில்லை என்று பாஜக அதிகாரப்பூர்வமாக தெரிவித்து விட்டது. தற்போது இரண்டாவது பெரிய கட்சியான 56 எம்எல்ஏக்களை வைத்திருக்கும் சிவசேனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர அரசியலில் எந்தவொரு கட்சியும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலைதான் தற்போது உள்ளது. பாஜக ஆட்சியமைக்க வேண்டும் என்றால் அதற்கு சிவசேனாவின் ஆதரவு கண்டிப்பாக தேவை. 

தற்போது சிவசேனா, தேசியவாத காங்கிரசின் ஆதரவை நாடியுள்ளது. இருப்பினும், காங்கிரசும் ஆதரவு அளித்தால்தான் மாநிலத்தில் சிவசேனா ஆட்சியமைக்க முடியும்.

இந்த சூழலில்தான் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி இன்று கூடுகிறது. இதில் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். கூட்டத்தில் சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்து முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

.