This Article is From Mar 30, 2019

காந்திநகரில் அமித்ஷா இன்று வேட்புமனு தாக்கல்! - பிரமாண்ட ஏற்பாடுகள்!

மக்களவை தேர்தல் 2019: காந்திநகரில் அமித்ஷா இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்த தலைவர்கள் பலரும் அங்கு திரண்டுள்ளனர்.

காந்திநகரில் அமித்ஷா இன்று வேட்புமனு தாக்கல்! - பிரமாண்ட ஏற்பாடுகள்!

வேட்புமனு தாக்கலுக்கு முன்பு பொதுக்கூட்டத்திலும் அமித்ஷா பங்கேற்கிறார்.

Gandhinagar:

மக்களவைத் தேர்தலில் குஜராத் தலைநகர் காந்திநகரில் பாஜக தலைவர் அமித்ஷா போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை இன்று அவர் தாக்கல் செய்கிறார். இதனையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்த தலைவர்கள் அனைவரும் இன்று காந்திநகர் விரைந்துள்ளனர்.

பாஜக தலைவர் அமித்ஷா மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர், அவர் முதல் முறையாக இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்கான வேட்புமனுவை இன்று அவர் தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு முன்னதாக அவர் அகமதாபாத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்த பின்னர் பிரமாண்ட பேரணியிலும் பங்கேற்கிறார்.

அமித்ஷா வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் அமித்ஷாவுக்கு ஆதரவாக பேரணியில் கலந்துகொள்கின்றனர். இதேபோல், சிவசேனா தலைவர் உத்தவ் தக்கரே, முன்னாள் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங், ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர். அகமதாபாத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவுக்கு பேரணி நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த பேரணியில் வயது மூப்பு காரணமாக தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட பாஜக மூத்ததலைவர் எல்.கே.அத்வானி பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. அத்வானி காந்திநகர் தொகுதியில் 6 முறை வெற்றி பெற்றவர் ஆவார். அவரது தொகுதியே தற்போது அமித்ஷாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்த தலைவரகள் அனைவரும் அமித்ஷா வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஆதரவாக காந்திநகர் பகுதியில் குழுமியுள்ளனர். இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் மோடிக்கு அடுத்து இரண்டாவது மாபெரும் தலைவர் என்ற பெயரை அமித்ஷா அடைந்துள்ளார்.

.