ஒருவருக்கு கிடைத்த முதல்வர் பதவியை தட்டிப்பறிக்க நினைப்பது நல்லது அல்ல - கே.எஸ்.அழகிரி
ஹைலைட்ஸ்
- ஜோதிராதித்ய சிந்திய மீது கே.எஸ்.அழகிரி கடும் விமர்சனம்
- ஜோதிராதித்ய சிந்தியா செய்தது வரலாற்று பிழை
- அதிகார போதைகளில் இருந்து அவரால் வெளிவர முடியவில்லை.
காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா வரலாற்றுப் பிழையைச் செய்துள்ளார் எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச அரசியலில் பெரும் திருப்பமாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். அவருடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 20 பேரும் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். தொடர்ந்து, கட்சி மீது அதிருப்தியிலிருந்த சிந்தியாவுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடந்த முயன்ற போதும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.
இதனிடையே, இன்று காலை ஜோதிராதித்ய சிந்தியா மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நடந்து முடிந்த சில மணி நேரத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாகச் சோனியா காந்திக்கு சிந்தியா கடிதம் அளித்துள்ளார்.
அந்த கடிதத்தில், காங்கிரஸில் அடிப்படை உறுப்பினராகக் கடந்த 18 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறேன். இப்போது நான் வெளியேறும் நேரம் வந்து விட்டது. நான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன். கட்சியை விட்டு வெளியேறினாலும், நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மாறாது. காங்கிரசுக்குள் இனிமேலும் இருந்துகொண்டு அவற்றைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என சிந்தியா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது, 18 வருடங்களாகக் கட்சியிலிருந்த ஜோதிராதித்ய சிந்தியா வரலாற்றுப் பிழையைச் செய்துள்ளார்.
ஒருவருக்குக் கிடைத்த முதல்வர் பதவியைத் தட்டிப்பறிக்க நினைப்பது நல்லது அல்ல. சமீபத்தில் நின்ற தேர்தலில் ஜோதிராதித்ய சிந்தியா தோல்வியுற்றார். ஒரு மாநிலத்தில் ஒரு முதலமைச்சர் தான் இருக்க முடியும். இரண்டு முதலமைச்சரா இருக்க முடியும்? ஜனநாயகத்தின் அடிப்படையில் கமல்நாத் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். சட்டவிரோதமாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
மீசை முளைக்காத காலத்திலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா அதிகாரத்திலிருந்துள்ளார். வாய்ப்புகளிலேயே வாழ்ந்துள்ளார். அதிகார போதைகளிலிருந்து அவரால் வெளிவர முடியவில்லை. அவருக்கு முதலமைச்சர் கனவு இருக்கிறது. ஆசை வெட்கமறியாது என்று சொல்வார்கள். இல்லையென்றால் அமித்ஷாவின் காரில் அவரால் ஒன்றாகப் பயணிக்க முடியுமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.