சந்திர முர்மு ராஜினாமா: ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்!

புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹாவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். 

சந்திர முர்மு ராஜினாமா: ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்!

New Delhi:

ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக இருந்த சந்திர முர்மு நாட்டின் புதிய தணிக்கையாளர் பதவிக்கு முன்னணியில் உள்ளளதாக என்டிடிவிக்கு தெரிய வந்துள்ளது. இதனிடையே, முர்மு நேற்றைய தினம் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹாவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநராக கிரீஷ் சந்திர மர்முவின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து, மனோஜ் சின்ஹாவை புதிய துணை நிலை ஆளுநராக நியமனம் செய்துள்ளார் என தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ஆளுநராக மனோஜ் சின்ஹாவை நியமித்ததில் குடியரசுத்தலைவர் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ராஜீவ் மெஹ்ரிஷிக்கு 65 வயதாகி விட்டதால், அவரது பதவி இந்த வாரம் காலியாகிவிடும் என தெரிகிறது. கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஒரு அரசியலமைப்பு பதவியாகும் அதனை காலியாக விட முடியாது. 

ஆக.8ம் தேதி ராஜீவ் மெஹ்ரிஷி 65 வயதை எட்டுகிறார். அதனால், தான் அவருக்கு மாற்றாக ஒருவரை ஏற்பாடு செய்வதில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக அமைச்சரவை செயலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் என்டிடிவிக்கு தெரிவித்துள்ளார். 

கிரிஷ் சந்திரா மர்மு 1985ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்வானார். இவர், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் மோடியின் முதன்மை செயலாளராகவும் இருந்தார். தொடர்ந்து, மோடி பிரதமர் ஆனதும் முர்மு உள்துறை நிதிஅமைச்சகத்தில் பணியாற்றி வந்தார். 

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பரிவு 370-ஐ கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் முதல் துணைநிலை ஆளுநராக கிரிஷ் சந்திரா மர்மு நியமனம் செய்யப்பட்டார்.