காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு (DK Shivakumar) செப்.13 வரை அமலாக்கத் துறை கஸ்டடி!

கடந்த 2017 ஆகஸ்டில் சிவகுமாருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

கைதுக்குப் பின்னர் விசாரணைக்காக சிவக்குமார் டெல்லி கொண்டு செல்லப்பட்டார்

ஹைலைட்ஸ்

  • நேற்றிரவு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார் சிவக்குமார்
  • கர்நாடகாவில் சிவக்குமார் கைதுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் செய்கிறது
  • சிவக்குமார் மீது பணமோசடி புகார் உள்ளது
New Delhi:

பண மோசடி தொடர்பான வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் அமைச்சருமான டி.கே. சிவக்குமார் கைது செய்யப்பட்டிருந்தார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை, டெல்லி நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டிருந்தது. இந்நிலையில் அவரை வரும் செப்டம்பர் 13 வரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுத்துள்ளது நீதிமன்றம். 

கடந்த 2017 ஆகஸ்டில் சிவகுமாருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இதில் கணக்கில் வராத ரூ. 300 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கைதுக்குப் பின்னர் விசாரணைக்காக சிவக்குமார் டெல்லி கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிவக்குமார், 'மறைந்த எனது தந்தைக்கு செய்ய வேண்டிய பூஜைகளை அமலாக்கத் துறையினர் நிம்மதியாக செய்யவிடவில்லை. விநாயகர் சதுர்த்தியை எனது குழந்தைகளுடன் கொண்டாட விரும்பினேன். அதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை' என்றார். 

நீதிமன்றத்தில் நடந்த வாதத்தின்போது அமலாக்கத் துறை தரப்பு, “சிவக்குமார், விசாரணையின்போது போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை” என்றது. அதற்கு சிவக்குமார் தரப்பு, “செய்யாதத் தப்பை ஒப்புக்கொள்ளாமல் இருப்பது ஒத்துழைக்காமல் இருப்பது என ஆகாது” என்று பதிலடி கொடுத்தது. 

இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தியின் கருத்து:

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ கஸ்டடியில் இருக்கிறார். கடந்த 21-ம்தேதி கைதான அவரை நாளை வரையில் விசாரிக்க சிபிஐக்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக காங்கிரசின் முக்கிய தலைவராக இருக்கும் டி.கே. சிவக்குமார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மேலும் சிவக்குமார் தரப்பு, “கடந்த 4 நாட்களாக சிவக்குமார் விசாரணை செய்யப்பட்டு வருகிறார். அவர் எப்போதெல்லாம் விசாரணைக்கு அழைக்கப்பட்டாரோ அப்போதெல்லாம் ஆஜரானார். ஆனால் அமலாக்கத் துறையோ, அவர் உண்மையைச் சொல்லவில்லை என்கிறது. இங்கு என்ன உண்மையை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்று காரசாரமாக வாதாடியது. 

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி, 'பழிவாங்கும் அரசியல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு சிவக்குமாரின் கைது இன்னொரு உதாரணம் ஆகும். தங்களது கொள்கையால் தோல்வியடைந்திருக்கும் மத்திய அரசு, மக்களின் கவனத்தை திசைத் திருப்புவதற்காக இதுபோன்ற கைது நடவடிக்கைகளை எடுக்கிறது' என்று கூறியுள்ளது. 


 

Listen to the latest songs, only on JioSaavn.com