This Article is From Aug 20, 2018

மக்களின் நாயகராக உருவெடுத்த கேரள மீனவர்: சமூக வலைத்தளங்களில் மக்கள் நெகிழ்ச்சியான பாராட்டு

பேரழிவுக்காலத்தில், கேரள மீனவர்கள் பாராட்டு, பணம் எதையும் எதிர்பாராது மகத்தான உதவிகளை மனிதநேயத்தோடு செய்து வருகிறார்கள்.

தன்னார்வலராக முன்வந்து பெண்கள் படகில் ஏற தன் முதுகைப் படியாக்கிய ஜெய்ஸ்வாலின் செயல் மக்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது

Malappuram, Kerala:

வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகில் ஏறுவதற்காக நீரில் குனிந்து அமர்ந்து தனது முதுகைப் படியாக்கி உதவிய கேரள மீனவர் சமூக வலைத்தளங்களில் நாயகனாக உருவெடுத்துள்ளார்.

32 வயதான கே.பி. ஜெய்ஸ்வால் என்னும் அவர் சனிக்கிழமை அன்று மலப்புரத்தில் உள்ள கிராமத்தில் இடுப்பளவு தண்ணீரில் தத்தளித்த பல பெண்கள் மிதவைப் படகில் ஏற முடியாமல் தவித்தபோது தயங்காமல் கீழே குனிந்து தன் முதுகையே படிக்கட்டாக்கி உதவினார்.

வெங்கரா கிராமத்தில் இம்மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீனவர்களின் முயற்சிகளை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். குறிப்பாக ஜெய்ஸ்வாலின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி அனைவரின் பாராட்டைப் பெற்று வருகிறது.
 

ட்விட்டரில் பலரும் இவரை தேசத்து நாயகன் என்றும் பேரழவின்போது வெளிச்சத்துக்கு வரும் மனிதத்தின் மகத்தான கதைகள் என்றும் இவரது செயலைப் போற்றி எழுதி வருகின்றனர்.

கேரளத்தில் பெய்து வரும் மழையால் பலநூறு மக்கள் இறந்துள்ளனர், பல்லாயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். இலட்சக்கணக்கானோர் முகாம்களிள் தங்கியுள்ளனர்.

திங்கள் முதல் திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை குறைந்து வெள்ள நீர் வற்றத் தொடங்கியுள்ளதால் மக்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் இத்தகைய வெள்ளத்துக்குப் பின் நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து மாநிலம் எங்கும் 3,700 மருத்துவ முகாம்களை அமைத்து, நோய்க்கட்டுப்பாட்டு முயற்சிகளில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

.