This Article is From Mar 27, 2019

மீண்டும் ஸ்ரீநகர் திரும்பினார் கமாண்டர் அபினந்தன்!

IAF Wing Commander Abhinandan Varthaman: பாகிஸ்தானிலிருந்து திரும்பிய பின்னர் பாதுகாப்பு அதிகாரிகளின் 12 நாட்கள் விசாரணைக்கு பின்னர் இந்திய விமானி அபினந்தன் விடுமுறையில் அனுப்பப்பட்டார்.

மீண்டும் ஸ்ரீநகர் திரும்பினார் கமாண்டர் அபினந்தன்!

IAF Pilot Abhinandan Varthaman: மார்.1ஆம் தேதி பாகிஸ்தானில் இருந்து அபினந்தன் விடுவிக்கப்பட்டார்.

New Delhi:

பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் 2 நாட்கள் கழித்து விடுவிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் (IAF Pilot Abhinandan) 4 வார மருத்துவ விடுப்பில் உள்ள நிலையில், மீண்டும் ஸ்ரீநகர் திரும்பியுள்ளார். மருத்துவ விடுப்பு நாட்களில், சென்னையில் உள்ள தனது குடும்பத்தினருடன் இருப்பதை விட அபினந்தன் ஸ்ரீநகரில் உள்ள தனது படைபிரிவினருடன் இருப்பதையே விரும்புகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானிலிருந்து திரும்பிய பின்னர் பாதுகாப்பு அதிகாரிகளின் 12 நாட்கள் விசாரணைக்கு பின்னர் அபினந்தன் (Abhinandan) விடுமுறையில் அனுப்பப்பட்டார். அவரது நான்கு வார விடுப்புக்கு பின்னர் மருத்துவக் குழு அவரது உடல்தகுதியை ஆராய்ந்து அவர் மீண்டும் போர்விமானத்தை இயக்க அனுமதிப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானைப்படை வீரர்கள் கடந்த மாதம் 26ம் தேதி குண்டுகள் வீசி பயங்கரவாத பயிற்சி முகாமை தரைமட்டமாக்கினர்.

இதைத்தொடர்ந்து மறுநாளே, இந்திய பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது. அப்போது இந்திய போர் விமானங்கள் குறுக்கிட்டு அவற்றை தடுத்து நிறுத்தின. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை, இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் சுட்டு வீழ்த்தினர்.

இந்தநிலையில், இந்திய விமானப்படை வீரர் சென்ற மிக்-21 ரக போர் விமானம் பாகிஸ்தான் விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால், விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து அபினந்தன் உயிர் தப்பினார்.

எனினும், பாகிஸ்தான் எல்லையில் அபினந்தன் தரையிரங்கியதால் அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து, 2 நாள் சிறை பிடித்து வைத்திருந்தது. பின்னர், சர்வதேச நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து அபினந்தன் விடுவிக்கப்பட்டார்.

அவர் நாடு திரும்பியதும் டெல்லியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்வேறு மருத்துவ சோதனைகள், ராணுவ விளக்க நடவடிக்கைகளுக்கு பின்னர் அவர் 4 வாரங்கள் விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து தற்போது, தனது விடுமுறை முடியும் முன்பே ஸ்ரீநகரில் உள்ள தனது விமானப்படைத் தளத்துக்கு அவர் திரும்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

.