This Article is From Aug 16, 2019

’ஒரே கல்லில் 2 மாங்கா’ ஜொமேட்டோவை வித்தியாசமாக பயன்படுத்திய நபருக்கு குவியும் பாராட்டுக்கள்!

வணிக வளாகத்தில் இருந்த ஒபேஷ் வீடு திரும்பி செல்வதற்கு எந்த வாகனங்களும் கிடைக்கவில்லை என்று தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

’ஒரே கல்லில் 2 மாங்கா’ ஜொமேட்டோவை வித்தியாசமாக பயன்படுத்திய நபருக்கு குவியும் பாராட்டுக்கள்!

ஹைதராபாத்தில் உள்ள இளைஞர் ஒருவர் ஜொமோட்டோவை இலவச பயணம் செய்ய பயன்படுத்தியுள்ளார்.


நீங்கள் எந்த பொது போக்குவரத்தோ, அல்லது கால் டாக்சியோ கிடைக்காத ஒரு சூழ்நிலையில் என்ன செய்வீர்கள்? இப்படி ஒரு சூழ்நிலையை சமாளிக்க ஹதராபாத்தில் உள்ள இளைஞர் ஒருவர் புதிய வகை யோசனை ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அப்படி என்ன அந்த யோசனை என்கிறீர்களா? 

தான் இருக்கும் இடத்தின் அருகில் உள்ள உணவகத்தில் இருந்து, தனது வீட்டிற்கு ஜொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துவிட்டு, டெலிவரி செய்பவருடனே தனது வீட்டிற்கு சென்றதே அந்த புதிய யோசனை.. இவரின் இந்த 'பலே' யோசனையை நெட்டிசன்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். 

இதுகுறித்து ஓபேஷ் கோமிரிசெட்டி என்ற அந்த இளைஞர் தனது முகநூல் பதிவில் கூறியதாவது, இரவு 11.50 மணி அளவில் தான் ஒரு தனியார் வணிக வளாகத்தில் இருந்ததாகவும், அங்கிருந்து தனது வீட்டிற்கு செல்ல ஆட்டோக்காக காத்திருந்ததாகவும் ஆனால், அந்த நேரத்தில் எந்த வாகனங்களும் கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். 

இரவு நேரம் என்பதால், கால் டாக்சிக்கும் இரண்டு மடங்கு அதிக கட்டணத்தொகை செலுத்த வேண்டி இருந்துள்ளது. இதனால், சூழ்நிலையை சமாளிக்க என்ன செய்யலாம் என்று நிதானமாக யோசித்த அந்த நபருக்கு திடீரென ஒரு யோசனை உதித்துள்ளது. அதாவது, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கும் வகையில் யோசித்துள்ளார் ஓபேஷ், ஜொமேட்டோவில், தான் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் உணவு ஆர்டர் செய்துள்ளார். 

அப்போது, உணவை எடுத்துச்செல்ல ஹோட்டலுக்கு வந்த ஜொமேட்டோ டெலிவரி நபரிடம், தனது வீட்டிற்கே உணவு ஆர்டர் செய்ததாகவும், தன்னை வீட்டில் இறக்கிவிடும் படியும் கூறியுள்ளார். இதற்கு டெலிவரி நபரும் சம்மதம் தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, ஜொமேட்டோ டெலிவிரி நபர் அவரை வீட்டில் இறக்கி விட்டுள்ளார். தொடர்ந்து, அவர் தனக்கு 5 ஸ்டார் ரேட்டிங் அளிக்கும் படி கூறிவிட்டு சென்றுவிட்டதாகவும் ஒபேஷ் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். 

மேலும், அந்த பதிவிற்கு கடைசியில் அவர் 'இலவச சவாரிக்கு நன்றி ஜொமேட்டோ' என்றும் தெரிவித்துள்ளார்.


இவரது இந்த முகநூல் பதிவிற்கு ஜொமேட்டோ நிறுவனுமும் 'அறிவாளி' என பதிலளித்துள்ளது. 
 


தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் அவரது புதிய யோசனைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 


 

.