This Article is From Jun 29, 2020

லாக்டவுனை நீட்டிக்கும் ஹைதராபாத்! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவல் எண்ணிக்கையை கண்டு யாரும் அஞ்ச வேண்டாம் என்றும், ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 13 ஆயிரத்தினை கடந்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • ஹைதராபாத் பகுதியில் மட்டும் முழு முடக்கம்
  • மூன்று அல்லது நான்கு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்
  • தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 13,436 ஆக அதிகரித்துள்ளது
Hyderabad:

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில், முன்னெப்போதும் இல்லாத நிலையில் நேற்று ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இதன் காரணமாக நாட்டின் ஒட்டு மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையானது 5.28 லட்சமாக அதிகரித்திருந்தது. இந்நிலையில் தென் இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், தனது மாநிலத்தில் லாக்டவுனை நீட்டிக்கப்போவதாக அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் அல்லாமல் தொற்று அதிகமாக இருக்கக்கூடிய ஹைதராபாத் பகுதியில் மட்டும் முழு முடக்கத்தினை அமல்படுத்த மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாக மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைப்படி லாக்டவுனை நீடிக்கும் முடிவினை மூன்று அல்லது நான்கு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவல் எண்ணிக்கையை கண்டு யாரும் அஞ்ச வேண்டாம் என்றும், ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

“ஹைதராபாத்தில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்த மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ள நிலையில், மீண்டும் லாக்டவுனை அமல்படுத்துவதற்கு அரசு நிர்வாகமும்,  மக்களும் தயாராக இருக்க வேண்டும்.“ என முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நாடு தழுவிய அளவில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் தளர்வுகள் ஹைதராபாத்திலும் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. ஹைதராபாத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 10,000ஐ கடந்துள்ளது. சனிக்கிழமையன்று, தெலுங்கானாவில் பதிவான 1,087 கொரோனா தொற்று பாதிப்பாளர்களின் எண்ணிக்கையில் 888 பேர் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

"இரண்டு முதல் மூன்று நாட்கள் நிலைமையை தீவிரமாக ஆராய்வோம். தேவைப்பட்டால், பூட்டுதல், மற்றும் மாற்று வழிகள் மற்றும் பிற தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அமைச்சரவை கூட்டப்பட்டு ஒரு முடிவு எடுக்கப்படும்," என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

COVID-19 ஐக் கட்டுப்படுத்துதல் மற்றும் நோயாளிகளுக்கு கிடைக்கக்கூடிய சிகிச்சை, குறித்து நேற்று நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தின் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது. கூட்டத்தில் மருத்துவ மற்றும் சுகாதார அமைச்சர் எட்டெலா ராஜேந்தர், நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.டி.ராமராவ் மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

"தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது, ​​தெலுங்கானா மாநிலத்தில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. பயம் தேவையில்லை. தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்கிறோம். ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அறிகுறியற்ற நோயாளிகளுக்கு அவர்களின் வீடுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது, ”என மருத்துவ மற்றும் சுகாதார அமைச்சர் எட்டெலா ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று அதிகபட்சமாக 1,087 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக மாநிலத்தில் ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 13,436 ஆக அதிகரித்தது. அதே போல அன்றைய தினத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 243 பேர் மாநிலம் முழுவதும் உயிரிழந்துள்ளனர்.

.