This Article is From Jun 27, 2019

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி!

G20 summit: பிரதமர் மோடி மற்றும் டிரம்ப் சந்திப்பின் போது, இந்தியா - அமெரிக்க வர்த்தகம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள், குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர், மைக் பாம்பியோ டெல்லியில் நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இன்று இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

ஜி-20 உச்சி மாநாட்டிற்காக ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Osaka:

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றடைந்தார். 14-வது ஜி-20 உச்சி மாநாடு, ஜப்பானில் நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில், பிரதமர் மோடி மற்றும் டிரம்ப் சந்திக்க உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - அமெரிக்க வர்த்தகம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள், குறித்து இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

மக்களவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று புதிய அமைச்சரவை அமைத்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பை பிரதமர் மோடி தேர்தலுக்கு பின் முதல்முறையாக சந்திக்க உள்ளார். இதனிடையே, பிரதமர் மோடியின் வெற்றிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, அடுத்த 3 நாட்களில், சீனாவின் ஜின்பிங் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட 10 நாடுகளின் அதிபர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.

ஒசாகாவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றடைந்தார். அங்கு வாழும் இந்தியர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

பல வர்த்தக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் குறித்த இருதரப்பு உறவுகளில் உருவாகியுள்ள நெருக்கடியை அடுத்து பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர், மைக் பாம்பியோ டெல்லியில் நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இன்று இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில், தீவிரவாதம், எச்-1பி விசா, வர்த்தகம், ரஷ்யாவுடனான ஆயுத ஒப்பந்தம், இரானில் இருந்து எண்ணை கொள்முதல் செய்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த மாநாட்டில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

பிரதமர் மோடி பங்கேற்கும் 6-வது ஜி -20 மாநாடு இதுவாகும். வரும் 28-29 ஆகிய தேதிகளில் ஜி 20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

.