This Article is From Jul 20, 2018

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் : பிரான்ஸ் அறிக்கைக்கு பதில் தெரிவித்த ராகுல்

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் வெளியுறவுத்துறை மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அதுகுறித்து ராகுல்காந்தி பதில் தெரிவித்துள்ளார்

ஹைலைட்ஸ்

  • இந்தியா - பிரான்ஸ் இடையே 2008ல் ரஃபேல் விமான ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • விமான விவகாரத்தில் உண்மையை அரசு மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
  • ராகுலின் பேச்சுக்கு பிரான்ஸ் வெளியுறவுத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
New Delhi:

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் வெளியுறவுத்துறை மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அதுகுறித்து ராகுல்காந்தி பதில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்தது. இந்நிலையில், அதன் மீது இன்று விவாதம் நடந்தது.

இதில் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது. ரஃபேல் விமானங்கள் விலை பற்றிய விவகாரத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று எந்த ஒப்பந்தமும் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்திடப்படவில்லை என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரூன் தன்னிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்கையில், ரஃபேல் ஒப்பந்தம் ரகசியமாக வைக்கப்பட வேண்டிய ஒன்று என்று  அந்த ஒப்பந்தத்திலேயே உள்ளது. இதற்கு ஒப்புக்கொண்டதே காங்கிரஸ் தான் என்று பதிலளித்தார்.

இதுகுறித்து பிரான்ஸ் வெளியுறவுத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாடாளுமன்றத்தில் இன்று நடந்த விவாதத்தை நாங்கள் கவனித்தோம். இந்தியா 36 ரஃபேல் விமானங்களை வாங்க பிரான்ஸுடம் ஒப்பந்தம் போடப்பட்டபோது இந்த விவகாரத்தை வெளிப்படையாக தெரிவிக்கக்கூடாது. ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதும் ஒரு ஷரத்து தான் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராகுல்காந்தி பதிலளிக்கையில், தற்போது பிரான்ஸ் அரசு என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், கடந்த மார்ச் மாதத்தில் நான் பிரான்ஸ் அதிபரை சந்தித்தபோது அவர் இப்படித்தான் என்னிடம் தெரிவித்தார். அப்போது, ஆனந்த் ஷர்மாவும், மன்மோகன் சிங்கும் என் உடன் இருந்தனர் என்று தெரிவித்துள்ளார்

.