7 மாத சிறைக்குப் பின்னர் விடுதலையாகிறார் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா!!

83 வயதாகும் பரூக் அப்துல்லா கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதி முதற்கொண்டு வீட்டுச்சிறையிலிருந்து வருகிறார். பொது அமைதி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் இந்த சம்பவம் நடந்தது.

ஆகஸ்ட் 5-ம்தேதி கைது செய்யப்பட்டார் பரூக் அப்துல்லா.

ஹைலைட்ஸ்

  • பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுச்சிறையில் உள்ளார் அப்துல்லா
  • வீட்டுக் காவல் நீட்டிக்கப்படாததால் இன்று அப்துல்லா வெளியாக வாய்ப்பு
  • கடந்த 7 மாதங்களாக கடும் கட்டுப்பாட்டில் உள்ளது காஷ்மீர்.
New Delhi:

ஜம்மு காஷ்மீரில் 7 மாத வீட்டுச் சிறைக்குப் பின்னர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா விடுதலையாக உள்ளார். அவர் நாளை விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தவொரு விசாரணையும் இன்றி கைது செய்ய வழிவகுக்கும் பொது அமைதி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அப்துல்லா கைது செய்யப்பட்டார்.

83 வயதாகும் அவரும், அவரது மகன் உமர் அப்துல்லா, முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்டோரும் கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதி முதற்கொண்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

பரூக் அப்துல்லா ஸ்ரீநகரின் குப்கார் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். 

ஜம்மு காஷ்மீர் மட்டுமல்லாமல் இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வாகச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-யை மத்திய அரசு நீக்கியது. இதன் விளைவாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், பரூக் அப்துல்லா மட்டும் விடுதலையாகவுள்ளார். இந்த தகவலை அவரது மகள் சாபியா அப்துல்லா கான் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக அப்துல்லாவின் வீட்டுக்காவல் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆவேசமாகப் பேசிய பரூக் அப்துல்லா, 'உங்கள் உடலில் ஒரு பகுதி துண்டிக்கப்படும்போது, அனைத்துப் பாகங்களும் தீமையை எதிர்த்து ஒன்றாகச் செயல்படும் என்று நீங்கள் கருதுவீர்களா? மத்திய அரசு பிராந்தியங்களைப் பிரித்தது. இப்போது இதயங்களையுமா பிரிக்கிறார்கள்? இன்னும் அவர்கள் இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிப்பார்களா? நான் இந்தியா அனைவருக்கும் சொந்தமானது, எல்லோரும் மதச்சார்பற்ற அரசில் நம்பிக்கை வைத்துள்ளனர் என்று நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.' என்று NDTVக்கு பேட்டி அளித்திருந்தார். 

இதுதான் அவர் பொதுவெளியில் கடைசியாகத் தெரிவித்த கருத்துக்களாகும். இதன்பின்னர் அவர் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார்.

சில நாட்களுக்கு முன்பாக 8 முக்கிய எதிர்க்கட்சிகள், தீர்மான அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் ஜம்மு காஷ்மீரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்கள் குறிப்பாக முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.