'எல்லோரும் விடுவிக்கப்படும் வரை அரசியல் பேச மாட்டேன்' - பரூக் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் மட்டுமல்லாமல் இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வாகச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-யை மத்திய அரசு நீக்கியது. இதன் விளைவாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

விடுதலையான பின்னர் குடும்பத்தினருடன் பரூக் அப்துல்லா

ஹைலைட்ஸ்

  • காஷ்மீரில் விடுவிக்கப்பட்ட முதல் அரசியல் தலைவராக பரூக் அப்துல்லா உள்ளார்
  • 2 ஆண்டுகள் வரை சிறைவைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது
  • இன்னும் சில நாட்களில் மற்ற தலைவர்கள் விடுதலையாக வாய்ப்புள்ளது
New Delhi:

ஜம்மு காஷ்மீரில் கைதான எல்லோரும் விடுவிக்கப்படும் வரையில் அரசியல் பேச மாட்டேன் என்று முன்னாள் முதல்வரும், தற்போது வீட்டுச்சிறையிலிருந்து விடுதலை அடைந்துள்ளவருமான பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவர், 7 மாதங்கள் வீட்டுச் சிறைவாசத்துக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

வீட்டுச் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் பரூக் அப்துல்லா கூறியதாவது-

எனக்குச் சொல்வதற்கே வார்த்தையில்லை. நான் விடுதலை அடைந்து விட்டேன். ஜம்மு காஷ்மீரில் கைதான அனைவரும் விடுதலை அடையும் வரையில் நான் அரசியல் பேச மாட்டேன். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மட்டுமல்லாமல் இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வாகச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-யை மத்திய அரசு நீக்கியது. இதன் விளைவாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆவேசமாகப் பேசிய பரூக் அப்துல்லா, 'உங்கள் உடலில் ஒரு பகுதி துண்டிக்கப்படும்போது, அனைத்துப் பாகங்களும் தீமையை எதிர்த்து ஒன்றாகச் செயல்படும் என்று நீங்கள் கருதுவீர்களா? மத்திய அரசு பிராந்தியங்களைப் பிரித்தது. இப்போது இதயங்களையுமா பிரிக்கிறார்கள்? இன்னும் அவர்கள் இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிப்பார்களா? நான் இந்தியா அனைவருக்கும் சொந்தமானது, எல்லோரும் மதச்சார்பற்ற அரசில் நம்பிக்கை வைத்துள்ளனர் என்று நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.' என்று NDTVக்கு பேட்டி அளித்திருந்தார். 

இதுதான் அவர் பொதுவெளியில் கடைசியாகத் தெரிவித்த கருத்துக்களாகும். இதன்பின்னர் அவர் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார்.

சில நாட்களுக்கு முன்பாக 8 முக்கிய எதிர்க்கட்சிகள், தீர்மான அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் ஜம்மு காஷ்மீரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்கள் குறிப்பாக முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. 

இந்த சூழலில் இன்று பரூக் அப்துல்லா மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் நிலைமை சீரடைந்து வருவதால், அடுத்தடுத்து சில தலைவர்கள் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.