உளவு பார்த்த புகாரில் டி.ஆர்.டி.ஓ. ஊழியர் கைதாகியுள்ளார்.
Nagpur: மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ. செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும் ஒருவர் பாதுகாப்பு ஆவணங்களை உளவு பார்த்து வெளிநாட்டுக்கு அனுப்பியதாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக அதிரடி ஆய்வை உத்தரப்பிரதேச போலீசாரும், மகாராஷ்டிராவின் தீவிரவாத எதிர்ப்பு படையினரும் மேற்கொண்டனர். இதில் நிதிஷ் அகர்வால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள நிஷாந்த் அகர்வால் மகாராஷ்டிராவின் நாக்பூரில் செயல்பட்டு வரும் பிரம்மோஸ் ஏவுகணையை ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். இந்த பிரிவு டி.ஆர்.டி.ஓ.வின் கீழ் செயல்படுகிறது.
பிரம்மோஸ் ஏவுகணையின் தொழில் நுட்ப பிரிவில் கடந்த 4 ஆண்டுகளாக நிஷாந்த் பணியாற்றியுள்ளார். குருக்ஷேத்ராவில் உள்ள என்.ஐ.டி.யில் தங்கப் பதக்கம் பெற்றவர் நிஷாந்த் அகர்வால்.
“ஹனி ட்ரேப்” எனப்படும், பெண்களை பயன்படுத்தி காரியம் சாதிப்பதன் மூலமாக, நிதிஷ் குமாரை வசப்படுத்தி பாகிஸ்தான் அதிகாரிகள் தகவலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் விசாரணை நடத்தப்படுகிறது. இதுகுறித்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் தீவிரவாத எதிர்ப்பு படை தலைவர் அசீம் அருண் கூறுகையில், கைதாகியுள்ள நிஷாந்த் அகர்வாலின் கம்ப்யூட்டரில் இருந்து அதிமுக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளன. அவர் பாகிஸ்தானை சேர்ந்த பெண் பேஸ்புக் ஐ.டி.யுடன் சாட்டிங் செய்திருக்கிறார் என்று தெரிவித்தார்.
அலுவலக பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நிஷாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று கான்பூரில் டி.ஆர்.டி.ஓ. ஆய்வகத்தில் பணியாற்றும் 2 விஞ்ஞானிகள் மீதும் தீவிரவாத தடுப்பு படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.