This Article is From May 14, 2019

மோடியும், தமிழிசையும் அரசியலை விட்டு விலகத் தயாரா? - மு.க.ஸ்டாலின் சவால்!!

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலின், சந்திர சேகர ராவ் மற்றும் பாஜகவுடன் கூட்டணி பேசி வருவதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் விமர்சித்திருந்தார்.

மோடியும், தமிழிசையும் அரசியலை விட்டு விலகத் தயாரா? - மு.க.ஸ்டாலின் சவால்!!

ஸ்டாலின் - தமிழிசை மோதலால் தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

பாஜகவுடன் பேசி வருவதை நிரூபிக்க தவறினால் அரசியலை விட்டு விலக பிரதமர் மோடியும், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜனும் தயாரா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். 

மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் நெருங்கி வரும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின்னர் தெலங்கானா முதல்வர் உடனான சந்திப்பு தடைபட்டிருந்த நிலையில் நேற்று அவர்கள் இருவர் இடையிலான சந்திப்பு நடந்தது. 

இந்த நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், ''திமுக நிறம் மாறும் என்று எல்லோருக்கும் தெரிகிறது. பாஜகவுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது என்பது உண்மைதான். ஒருபக்கம் ராகுல், இன்னொருபக்கம் சந்திர சேகர ராவ், இன்னொரு பக்கம் மோடி.'' என்று கூறினார். 

தமிழசையின் பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது பேச்சுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது-

பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன் என்ற திருமதி தமிழிசையின் "பச்சைப் பொய்”க்கு என் பதில் இதோ! 
இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசை மே 23- ஆம் தேதிக்குப் பிறகு மாற்றிக்காட்டுவோம்! முதுகெலும்பில்லாத இந்த அ.தி.மு.க அரசைத் தூக்கியெறிவோம்!

மோடியுடனும் ஸ்டாலின் பேசி வருகிறார். பாஜக கூட்டணி வெற்றி பெறும் என தெரிந்துதான் எங்களுடன் பேசி வருகிறார் என்று பச்சைப் பொய் நிறைந்த பேட்டியை பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் அளித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று முதலில் அறிவித்தது திமுக. கடந்த 5 ஆண்டுகளில் சொல்ல முடியாத அளவுக்கு துயரத்தை அளித்த மோடியை, பாசிஸ்ட், சேடிஸ்ட், சர்வாதிகாரி என்று முதன் முதலில் விமர்சித்தது திமுக. 

திருமதி தமிழிசை சவுந்தர ராஜனோ அல்லது அவர் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று ஆசைப்படும் திரு நரேந்திர மோடியோ, ''மத்தியில் ஆட்சியமைக்க பாஜகவுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன்'' என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக தயாராக இருக்கிறேன். 

அப்படி இருவரும் நிரூபிக்க தவறினால் திரு நரேந்திர மோடியும், தமிழசை சவுந்தர ராஜனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? 

இவ்வாறு ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். 
 

.