This Article is From Sep 27, 2019

கடலோரப் பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு - அமைச்சர் எச்சரிக்கையால் பதற்றம்!

சில நாட்களுக்கு முன்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரின் உயிர்களுக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

கடலோரப் பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு - அமைச்சர் எச்சரிக்கையால் பதற்றம்!

ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு நாட்டு மக்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என ராஜ்நாத் கூறியுள்ளார்.

Kollam (Kerala):

இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் வாய்ப்புள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை செய்துள்ளார். இதனை எதிர்கொள்ள பாதுகாப்பு படைகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

கேரள மாநிலம் கொல்லத்தில் மாதா அமிர்தானந்தமாயியின் 66-வது பிறந்த நாளையொட்டி விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது-

நமது கடல் எல்லை மேற்குப் பகுதியில் குஜராத் மாநிலம் கட்ச் முதல், கேரளா வரை பரவியிருக்கிறது. நீண்ட நெடிய கடல் எல்லையை கொண்டிருப்பதால் இங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு அதிகம். இதனை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு படைகள் தயாராக இருக்க வேண்டும். 

நம் மீது புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு பதிலடியாக விமானப்படையினர் பாகிஸ்தானின் பாலகோட்டிற்குள் புகுந்து அதிரடி தாக்குதலை நடத்தியிருந்தது. நம்மை யாரும் பொருட்படுத்தாவிட்டால், நாம் அவர்களைப் பொருட்படுத்த மாட்டோம். 

தனக்காக உயிரை  தியாகம் செய்த வீரர்களை மதிக்கத் தெரியாத நாட்டிற்கு உலகில் எங்குமே மதிப்பு மரியாதை இருக்காது. நமக்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தாருக்கு ஆதரவாக நாட்டு மக்கள் இருக்க வேண்டும். 

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரின் உயிர்களுக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

.