This Article is From Oct 12, 2018

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஊழல் புகார்களை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

முதல்வர் மீதான புகார் குறித்த ஊழல் தடுப்பு அமைப்பின் விசாரணைகள் திருப்தி அளிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஊழல் புகார்களை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Chennai:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நெடுஞ்சாலை திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களை, தனது நெருங்கிய உறவினர்களுக்கு அளித்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரித்து வந்தனர். வழக்கு விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்பத்துறை இயக்குனர் சார்பாக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜரானார். அப்போது, நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கப்பட்டதில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை மறுத்த நீதிபதி, முதல்வர் கட்டுப்பாட்டில்தானே நெடுஞ்சாலைத் துறையும், லஞ்ச ஒழிப்புத்துறையும் உள்ளது என்று கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டார்.

முதல்வருக்கு எதிரான வழக்கு குறித்த ஆவணங்கள் அனைத்தையும், ஒரு வாரத்திற்குள் சிபிஐ அதிகாரிகளிடம் ஊழல் தடுப்பு பிரிவு ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று, வழக்கு விசாரணையை 3 மாதத்திற்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டதோடு, முகாந்திரம் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரிக்கவும் சிபிஐ-க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

.