This Article is From May 02, 2020

ஊரடங்கு நீட்டிப்பு: தனியார் நிறுவனங்களுக்கு என்ன கட்டுப்பாடு, 7 - 7 தடை உத்தரவு: 10 தகவல்கள்!

Coronavirus: நகர்ப்புறங்களில் உள்ள கட்டுமானப் பணிகளை, இருக்கும் ஆட்களை வைத்து செய்து கொள்ளலாம். புதிதாக ஆட்கள் வரவழைக்கப்படக் கூடாது.

ஊரடங்கு நீட்டிப்பு: தனியார் நிறுவனங்களுக்கு என்ன கட்டுப்பாடு, 7 - 7 தடை உத்தரவு: 10 தகவல்கள்!

Coronavirus: பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் மதுபானக் கடைகள் செயல்படலாம் (சில மாநில அரசுகள் அந்த மண்டலங்களிலும் மதுபானக் கடைகளை மூடிவைக்க முடிவெடுத்துள்ளன).

ஹைலைட்ஸ்

  • மே 17 ஆம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு தொடரும்: அரசு
  • 2வது முறையாக மத்திய அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது
  • ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன
New Delhi:

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் 2வது முறையாக இந்திய அளவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது மத்திய அரசு. இது குறித்து அறிவிப்பை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சகம், “ஊரடங்கு உத்தரவால் கோவிட்-19 எனப்படும் கொரோனா பரவலைத் தடுப்பதில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளோம்,” எனக் கூறியுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, மே 17 ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா பாதிப்பைப் பொறுத்து நாட்டில் உள்ள மாவட்டங்கள் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு ஏற்றாற் போல அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

10 முக்கியத் தகவல்கள்: 

1.மிகவும் அதிக பாதிப்பில் உள்ள கன்டெயின்மென்ட் மண்டலங்களில் (சிவப்பு மண்டலங்களிலேயே அதிக பாதிப்புள்ள பகுதிகள்), ஆரோக்ய சேது செயலி பயன்படுத்துவது கட்டாயமாகும். இந்த செயலி மூலம் ஒவ்வொரு நபரின் இருக்குமிடம், மருத்துவ மற்றும் பயண வரலாறு கொண்டு தொற்று ஏற்படுவது குறித்து கணிக்கப்படும். மருத்துவ அவசரங்களைத் தவிர வேறு எதற்கும் கன்டெயின்மென்ட் மண்டலங்களில் இருப்பவர்கள் பயணிக்க அனுமதி கிடையாது. அதேபோல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் ஆரோக்ய சேது செயலியைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்க உள்ளன. 33 சதவீத பணியாட்களுடன் பெரும்பான்மையான வியாபார மற்றும் தனியார் அலுவலகங்கள் திறந்திருக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பாக்கியுள்ள பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணி புரியலாம். 

2.பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் மதுபானக் கடைகள் செயல்படலாம் (சில மாநில அரசுகள் அந்த மண்டலங்களிலும் மதுபானக் கடைகளை மூடிவைக்க முடிவெடுத்துள்ளன). கடையில் மது வாங்கும்போது ஒருவருக்கும் இன்னொருவருக்கும் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். ஒரு கடையில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் இருக்கக் கூடாது. 

3.சில நடவடிக்கைகளுக்கு மட்டும் நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் மற்றும் ரயில்கள் மூலம் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு சாலை வழியாக செல்ல அனுமதி கிடையாது. பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடியே இருக்கும். அதேபோல மால்கள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், முடி திருத்தும் கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் திறக்க அனுமதி கிடையாது. மத மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது. அதே நேரத்தில் அரசின் அனுமதி பெற்று சாலை மார்க்கமாகவோ, ரயில் அல்லது விமானம் மூலமாகவோ பயணம் செய்ய அனுமதியுண்டு.

4.நாட்டில் இரவு 7 மணியிலிருந்து காலை 7 மணி வரை பயணம் செய்ய யாருக்கும் அனுமதி கிடையாது. இந்த உத்தரவை அமல்படுத்த சம்பந்தடப்பட்ட மாநில அரசுகள், 144 தடைச் சட்டத்திற்குக் கீழ் உத்தரவு பிறப்பிக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது அரசு. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கர்ப்பமான பெண்கள் மற்றும் 10 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகள் அனைத்து நேரங்களிலும் வீட்டிலேயே இருக்க வேண்டும். அத்தியாவசிய மற்றும் உடல்நலன் சார்ந்த விஷயங்களுக்காக மட்டுமே அவர்கள் வெளியில் வர அனுமதியுண்டு. 

5.சிவப்பு மண்டலங்களில் பொதுப் போக்குவரத்து மற்றும் டேக்சிகளுக்கு அனுமதி கிடையாது. 

6.சிவப்பு மண்டலங்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட சில பயணங்களுக்கு மட்டும் மக்கள் இரு சக்கர வாகனத்தில் ஒருவருடனும், நான்கு சக்கர வாகனத்தில் அதிகபட்சம் 2 பயணிகளுடனும் அனுமதிக்கப்படுவார்கள். நகர்ப்புறங்களில் உள்ள பொருளாதார மண்டலங்கள், தொழிற்ப்பேட்டைகள், தொழில் நகரங்களில் அனுமதி வாங்கி பயணிக்கலாம். 

7.அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி, மருந்து உற்பத்தி, மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி உள்ளிட்ட உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட அனுமதியுண்டு. தொடர் பணிகள் கோரும் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட அனுமதியுண்டு. ஐடி வன்பொருள் உற்பத்திக்கு அனுமதியுண்டு. 

8.நகர்ப்புறங்களில் உள்ள கட்டுமானப் பணிகளை, இருக்கும் ஆட்களை வைத்து செய்து கொள்ளலாம். புதிதாக ஆட்கள் வரவழைக்கப்படக் கூடாது.

9. சிவப்பு மண்டலங்களில் அச்சு மற்றும் மின்னணு ஊடகம், ஐடி மற்றும் ஐடி சார்ந்த சேவைகள், டேட்டா மற்றும் கால் சென்டர்கள், குளிர்சாதனக் கிடங்குகள் மற்றும் கிடங்கு சேவைகள், தனியார் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை சேவைகள், மற்றும் தனி நபர்களால் வழங்கப்படும் சேவைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலங்களில், இ-வர்த்தக நிறுவனங்கள் அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்ய மட்டுமே அனுமதியுண்டு. மற்ற மண்டலங்களில் அனைத்துப் பொருட்களையும் டெலிவரி செய்ய அனுமதியுண்டு. கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் உட்பட அனைத்துப் பணிகளுக்கும் அனுமதியுண்டு. 

10.ஆரஞ்சு மண்டலங்களில் ஓலா, உபர் உள்ளிட்ட டேக்சி சேவைகளுக்கு அனுமதியுண்டு. ஆனால், டிரைவருடன் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும். பச்சை மண்டலங்களில் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ள சில நடவடிக்கைகள் மட்டும் அனுமதிக்கப்படாது. பச்சை மண்டலங்களில் பொதுப் போக்குவரத்தும், 50 சதவீத பயணிகளுடன் இயங்க அனுமதியுண்டு. 
 

.